விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ஸீ தமிழ் தொலைக்காட்சி சர்வைவர் என்ற நிகழ்ச்சியை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘உலகநாயகன்’ கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பொஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 4 சீசன்களை நிறைவுசெய்துள்ளது.
மேலும், விரைவில் 5 ஆவது சீசனை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அறியமுடிகிறது.
இதனிடையே தற்போது இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக ஸீ தமிழ் தொலைக்காட்சி ‘சர்வைவர்’ என்ற நிகழ்ச்சியை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் பங்கேற்கும் போட்டியாளர்களை ஒரு தீவுக்கு அழைத்து சென்றுவிடுவார்கள்.
அங்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படும்.
இதில் போட்டியாளர்கள் இயற்கையின் ஆற்றலுக்கு எதிராக தங்களின் திறனை வெளிப்படுத்த வேண்டும்.
உடல் வெப்பத்திற்காக தீ மூட்டுவது, இயற்கைப் பொருட்களைக் கொண்டு கூடாரம் அமைப்பது உணவு மற்றும் குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளை தேடிப் பெறுவது உள்ளிட்ட சவால்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும்.
இந்த போட்டியானது போட்டியாளர்களின் மன மற்றும் உடல் வலிமையை பரிசோதிக்கும் விதமாக அமையும் என கூறப்படுகிறது.
இந்நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்குவார் எனவும் தகவல் கசிந்துள்ளது.
இந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக நந்தா, விக்ராந்த், விஜயலட்சுமி, வி.ஜே.பார்வதி, இந்திரஜா ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வெளியாகிவிட்டாலும் போட்டியாளர்கள், தொகுப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் தொலைக்காட்சி நிறுவனத்தினால் இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.