பௌத்த பிக்குகள் கொலை வழக்கு: 33 வருடங்களின் பின் விசாரணைகள் ஆரம்பம்!

அம்பாறை – அரந்தலாவ பகுதியில் பிக்குகள் உள்ளிட்ட 33 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை சி.ஐ.டி.யினர் முன்னெடுத்துள்ளனர்.

1987 ஆம் ஆண்டு இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் இருந்து தப்பியவர் ஒருவர் தாக்கல் செய்த மனு, உயர் நீதிமன்ற நீதியரசர்கள் கொண்ட அமர்வின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே அரந்தலாவ படுகொலை சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்தது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக முன்னிலையான சிரேஷ்ட அரச சட்டவாதி கலாநிதி அவந்தி பெரேரா அறிவித்தார்.

இந்நிலையில் இந்த விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கை புரட்டாசி மாதம் 12 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அம்பாறை – அரந்தலாவ பகுதியில் 1987ஆம் ஆண்டு ஜுன மாதம் 2 ஆம் திகதி பௌத்த பிக்குகள் அடங்களாக 33 பேர் கூட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இந்த படுகொலையை தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தியதாகவே கூறப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *