
கொழும்பு, பெப் 22: ரஷ்யா-உக்ரேன் போர் நிலைமை தொடர்பாக உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
அங்காராவில் உள்ள இலங்கை தூதரகம், உக்ரைனில் வசிக்கும் பதினான்கு மாணவர்கள் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட இலங்கை பிரஜைகளுடன் அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யும் வகையில் நெருங்கிய தொடர்பில் உள்ளது என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
உக்ரேனில் உள்ள பதினான்கு இலங்கை மாணவர்களில் ஆறு பேர் தற்காலிகமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், எஞ்சிய எட்டு மாணவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
மேலும், உக்ரேனில் உள்ள அனைத்து இலங்கை பிரஜைகளையும் அவதானத்துடன் செயற்படுமாறும் அங்காராவிலுள்ள இலங்கை தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறும் வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது.
மேலும், உக்ரைனுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுக்கும் என்ற அச்சத்தால், நாட்டின் கிழக்கு பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ளது.