
கொழும்பு, பெப் 22: இலங்கையில் அரசு ஊழியர்கள் அனைவரும் வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் பூஸ்டர் தடுப்பூசி உள்ளிட்ட 3 டோஸ்களையும் பெற்றிருக்க வேண்டும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் “முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் வரும் ஏப்ரல் மாதத்துக்கு பிறகு பொது இடங்களுக்குச் செல்ல முடியாது. அனைத்து அரச நிறுவனங்களும் பொது இடங்கள் என்பதால், அந்த இடங்களில் பணியாற்றும் அனைவரும் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும்.
அரசு நிறுவனம் ஒன்றிற்கு செல்லும் எவருக்கும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அலுவலர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளார்களா என்று விசாரிக்க உரிமை உண்டு.
அத்தகைய விசாரணையின் போது அந்த அதிகாரி முழுமையாக தடுப்பூசி போடவில்லை என்றால், அது தொடர்பாக பிரதேச பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்றார் அவர்.