
சென்னை, பெப்.22
சென்னை உள்ளிட்ட 4 உள்ளாட்சி அமைப்புகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சேதப்படுத்தியது, பழுது காரணமாக 57 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு சனிக்கிழமை அமைதியாக நடந்து முடிந்தது. மொத்தம் உள்ள 489 பேரூராட்சிகளில் 74.68 சதவீதம், 138 நகராட்சிகளில் 68.22 சதவீதம், 21 மாநகராட்சிகளில் 52.22 சதவீதம் என மொத்தம் 60.70 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக தருமபுரி மாவட்டத்தில் 80.49 சதவீதம், குறைந்தபட்சமாக சென்னையில் 43.59 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
வாக்குச்சாவடிகளில் இருந்து பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 268 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாக்கப்பட்ட அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.
இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் தீவிரமாககண்காணிக்கப்பட்டு வருகிறது. வேட்பாளர்களின் முகவர்கள் கண்காணிக்கும் விதமாக பெரிய திரைகளிலும் சிசிடிவி காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை பொலிஸார் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை செவ்வாய்கிழமை ஆரம்பமாகியுள்ளது.