முன்பள்ளி ஆசிரியர்களை இணையவழியில் சந்தித்து பேசிய ஆளுநர்: போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

யாழ்ப்பாணம், பெப்.22

வடமாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் தமக்கான சம்பளத்தை அதிகரிக்குமாறுகோரி ஆளுநர் செயலகம் முன்  திங்கட்கிழமை நடத்திய போராட்டம் வடமாகாண ஆளுநரின் உறுதிமொழியை அடுத்து   தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

முன்பள்ளி ஆசிரியர்களின் அடிப்படைச் சம்பளமாக 6,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதனை அதிகரிக்குமாறு கோரி  திங்கட்கிழமை முன்பள்ளி ஆசிரியர்கள் ஆளுநர் செயலகம் முன் போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஆளுநரை சந்திக்கும் வரை குறித்த இடத்திலிருந்து தாம் விலகமாட்டோம் என கூறி மாலை 6 மணி வரை குறித்த இடத்தில் அமர்ந்திருந்தார்கள். இதனை அடுத்து ஆளுநர் செயலக அதிகாரிகள் வடமாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து இணையவழி மூலம் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டவர்களை அழைத்து ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் தமது நியாயமான கோரிக்கையை ஆளுநர் நிறைவேற்ற உதவ வேண்டும் எனக் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்ததுடன், அதுவரை முன் பள்ளிகளில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் என தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த வடமாகாண ஆளுநர் தமது கோரிக்கை அடங்கிய கடிதத்தை ஆளுநர் செயலகம் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்குமாறு தெரிவித்ததுடன் வவுனியா மாவட்டத்தில் இடம்பெறுகின்ற மக்கள் கலந்துரையாடலில் பங்குபற்றுவதால் நேரில் சந்திக்க முடியவில்லை. ஆகவே தங்களது கோரிக்கையை ஒரு வாரத்துக்குள் பரிசீலனை செய்து கலந்துரையாடலுக்கு அழைப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *