
கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் அனைத்து விடயதானங்களுக்குமான பரீட்சைகளை நிறைவு செய்த மாணவர்கள், தமக்கான இரண்டாவது கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு சுகாதார பிரிவு கோரிக்கை விடுக்கின்றது.
இந்த கோரிக்கையை, சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் டொக்டர் சமித்த கினிகே விடுத்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ், 12 முதல் 16 வயதுக்கு இடைப்பட்ட 745,000 மாணவர்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் இன்றி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், 16 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட 1.1 மில்லியன் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இந்த நிலையில், தற்போது நடைபெற்றுவரும் உயர்தர பரீட்சையின், அனைத்து விடயதானங்களுக்குமான பரீட்சைகளை நிறைவு செய்த மாணவர்கள், தமக்கான இரண்டாவது தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுக்கின்றார்.
அதன்படி, தமது பிரதேசத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு சென்று, தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.