திருமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கனிய மணல் அகழ்வு தொடர்பில் ஆராய்வு…!

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்றையதினம் (27) ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களான கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துக்கோரள மற்றும் திகாமடுல்ல  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.  அதாவுல்லா  ஆகியோரின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட செயலாளர் சாமிந்த ஹெட்டியாரச்சியின் வரவேற்புரையை தொடர்ந்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் ஆரம்பமானது.

கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில்  எடுக்கப்பட்ட தீர்மானங்களின்  முன்னேற்றங்கள் தொடர்பாகவும், முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன. 

கிண்ணியா மற்றும் மூதூர் பிரதேச செயலக பிரிவுகளில் அரசுக்குரிய 300 மீற்றர் அகலமான கடற்கரை வலயத்தில் கனிய மணல் அகழ்வு செய்வதற்காக நீண்டகால குத்தகை அடிப்படையில் காணி வழங்க அங்கீகாரம் பெறுதல், நிலாவெளி தொடக்கம் கும்புறுப்பிட்டி கிழக்கு வரையான கடற்கரை 300 மீற்றர் பரப்பளவான அரச காணியை ஜேம்ஸ் குளோபல் தனியார் கம்பனிக்கு நீண்டகால அடிப்படையில் காணி வழங்க அங்கீகாரம் பெறுதல், மாவட்டத்தில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் ஏனைய சுகாதார துறை வெற்றிடங்கள், மூதூர் கட்டைபறிச்சான் பால நிர்மாணம் தொடர்பான விடயம், மக்களின் கோரிக்கைக்கு அமைய புதிய நீர்க்குளாய் இணைப்பு வழங்குவதில் நிலவும் தாமதம் தொடர்பான விடயம், இலக்கம் 115, 22 யுனிற்றில் கிராம சபை கிணறு உள்ள இடத்தில் கந்தளாய் ரஜவெவ முதியோர் சங்கத்துக்கு காணி வழங்குதல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

மேலும், குச்சவெளி, திரியாய் கிராம பிரிவில் “மொபைல் பிளான்ற்” நிர்மாணிப்பதற்காக 1 ஏக்கர் காணியை இலங்கை கனிய மணல் வழங்குவதற்கு அங்கீகாரம் பெறுதல், பேண்தகு வன முகாமைத்துவம் ஊடாக காணி பிரச்சினைகளை தீர்த்தல், கந்தளாய் வீதியின் இருபுறங்களில் தயிர் வியாபாரத்தில் ஈடுபடுவதனால் நிரந்தரமாக வசிக்கும் மக்களின் காணி உரிமை பிரச்சினை,  உப்பாறு, கண்டல்காடு விளைநிலங்களுக்கு ஏற்படும் சேதம், கிண்ணியா பிரதேச சபை பிரதேசத்துக்காக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை பிரதேச அலுவலகத்தை பெறுதல்,போன்ற பல விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டன.

இதன்போது  பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஆரியவதி கலப்பத்தி, கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், அரச உயரதிகாரிகள் மற்றும் முப்படைகளின் உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *