வங்குரோத்து நிலையை அடைந்திருப்பதால் இழுத்து மூடும் படியும் பரிந்துரை செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம், கண்டி தலதா மாளிகை பெரஹராவை விளம்பரப்படுத்தவென விமானமொன்றுக்கு பல இலட்சம் ரூபா செலவிட்டு ஸ்டிக்கர் அலங்காரம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எயார் பஸ் ரகத்தைச் சேர்ந்த A330-300 மற்றும் 4R-ALP ஆகிய ஸ்ரீலங்கன் விமானங்கள் இரண்டை இவ்வாறு 78 இலட்சம் ரூபா செலவில் அலங்கரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விரண்டு விமானங்களையும் அலங்கரிப்பதற்கான ஸ்டிக்கர்கள், அமெரிக்காவிலிருந்து தருவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தி விமானங்களை அலங்கரிப்பதற்காக மொத்தம் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக செலவு ஆகும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல விரைவில் ஓரிரு வாரங்களில் மேலும் 06 விமானங்களுக்கு அலங்காரம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியில் டொலர் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருள்களின் இறக்குமதியும் வரையறுக்கப்பட்டுள்ளதோடு, விரைவில் உணவுத்தட்டுப்பாடு வரலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இப்படியான சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான நிறுவனம் அவ்வாறு விண்ணைத்தொடும் பட்ஜட் செலவுகளை செய்வது நியாயமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.