முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்காவில் பிரதேசத்தில் மிக மிகப்பெரியளவில் கிரவல் அகழ்வு இடம்பெற்றுவருவதோடு மிகப்பெரிய வனப்பகுதியும் அழிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் பல்வேறு கலந்துரையாடல்களில் கலந்துரையாடப்பட்டாலும் எந்தவித தீர்வுகளுமின்றி குறித்த கிரவல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.
இங்கு பெருமளவில் அழிக்கப்பட்டிருந்தமை தொடர்பில் ஊடகங்களிலும் பல்வேறு தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று (17) காலை குறித்த கொக்காவில் பகுதிகளில் புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்போது கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற கிரவல் அகழ்வை பார்வையிட்டபோது அங்கு சட்டவரம்புகள் மீறப்பட்டு கிரவல் அகலப்பட்டதை இரண்டு இடங்களில் மூன்று அகழ்வு பத்திர அனுமதிகளை பயன்படுத்தி இடம்பெற்ற சட்டமீறலை அவதானித்த நிலையில் உடனடியாக மூன்று அனுமதிப்பத்திர நபர்கள் மற்றும் 6 பக்கோ இயந்திரங்கள் 6 சாரதிகளையும் ஐயன்கன்குளம் பொலிஸாரிடம் முறையிட்டு ஒப்படைத்தனர்.
புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய ஐயன்கன்குளம் பொலிஸார் 6 பக்கோ இயந்திரங்களையும் பக்கோ இயந்திர சாரதிகள் 6 பேர் மற்றும் அனுமதிப்பத்திர உரிமையாளர்கள் மூவர் உள்ளடங்கலாக 9 பேரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஐயன்கன்குளம் பொலிஸார் இவர்களுக்கெதிராக நீதிமன்றம் ஊடாக உரிய சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் குறித்த செயற்பாடுகளுடன் தொடர்புடைய 5 டிப்பர் வாகனங்கள் சுமார் 5 மணிநேரமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தபோதும் அவை கைது செய்யப்படவில்லை அவற்றிலிருந்த மண்ணை பறித்து விட்டு விடுவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.