தான் பலவந்தமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அரசியலமைப்பின் 17 ஆவது உறுப்புரையுடன் சேர்த்து பார்க்கப்பட வேண்டிய 126 ஆவது உறுப்புரை பிரகாரம் அவர் நேற்று (16) வெள்ளிக்கிழமை இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
சட்டத்தரணி ரவீனா டி சில்வா ஊடாக உயர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட இந்த அடிப்படை உரிமை உரிமை மீறல் மனுவில் சிரேஷ்ட சட்டத்தரனி ருஷ்தி ஹபீப், ஜோசப் ஸ்டாலின் சார்பில் ஆஜராகவுள்ளார்.
தனக்கு நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட போதிலும் பொலிஸார் பலவந்தமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியமையூடாக தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறித்த மனுவின் ஊடாக கோரியுள்ளார்.
அத்துடன் ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தடை விதித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வௌியிடப்பட்ட கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு பொலிஸ் ஊடகப் பிரிவினால் கடந்த 6 ஆம் திகதி வௌியிடப்பட்ட ஊடக அறிக்கை செல்லுபடியற்றது என உத்தரவிடுமாறும் குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இதனை தவிர, ஜோசப் ஸ்டாலினுக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்குமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.