முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச சபை மற்றும் பிரதேச சபையின் ஆழுகையின் கீழ் உள்ள முள்ளியவளை உப அலுவலக அதிகாரிகளின் அசமந்த போக்கினாலும், பக்கச்சார்பான நடவடிக்கையினாலும், வீட்டிற்கு செல்லும் வீதிக்கு குறுக்கே வேலி அடைக்கப்பட்டுள்ளதாகவும், பல ஆண்டுகளாக இருந்த வீதியில் மதில் அமைக்கப்படுவதாகவும் இதனால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முள்ளியவளை மத்தி கிராம அலுவலர் பிரிவில் வீட்டுக்கு செல்லும் பொது வீதிக்கு குறுக்கே வேலியடைத்து வீதியினை பிடித்து எல்லை போட்டு மதில் கட்டும் நடவடிக்கை தொடர்பில் பிரதேச சபை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முள்ளியவளை 03 ஆம் வட்டாரம் ஜயன்கோவிலடி பகுதியினை சேர்ந்த குடியிருப்பாளர் ஒருவர் தனது வீட்டிற்கு செல்லும் பிரதேச சபையிக்கு சொந்தமான வீதியினை மறித்து தூண்போட்டு தகரம் அடித்துள்ளதால் வீதியில் செல்லமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முறையிட்டுள்ளார்.
அத்தோடு 27 ஆண்டுகளுக்கு மேலாக பாவனையில் இருந்த வீதியினை பிடித்து மதில் அமைப்பதற்கு யார் அனுமதி கொடுத்தது என்றும் கேள்வி எழும்பியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பிரதேச சபையின் வட்டார உறுப்பினர் சி.லோகேஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன் ஆகியோருக்கு தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் காணப்படுவதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.
வீதிக்கு குறுக்காக வேலி அடைத்த சம்பவம் நடைபெற்று ஒருமாதம் கடந்துவிட்ட நிலையில் வீதிக்கு குறுக்கே தற்போது மதில் கட்டும் நடவடிக்கையும் இடம்பெற்றுவருகிறது.
இது தொடர்பில் தான் பிரதேச சபை, பொலிசார், பிரதேச செயலகம், அரச அதிபர் உள்ளிட்ட அரச திணைக்களங்களுக்கு தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மனித உரிமை ஆணைக்குழுவினை நாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வீட்டுக்கு செல்லும் வீதியில் குறுக்காக அமைக்கப்பட்ட வேலி உடனடியாக அகற்றப்பட வேண்டும் எனவும், கிராம மக்கள் பலரும் உறுதிப்படுத்தும் 28 வருடங்களுக்கு மேலாக இருந்த வீதிக்கு குறுக்கே மதில் அமைக்கும் பணி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட நபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதேச சபையின் இவ்வாறான பக்கச்சார்பான நடவடிக்கையினால், கிராமங்களில் மக்கள் பாதிக்கப்படுவதுடன், வசதி படைத்தவர்களுக்கு மதில் கட்டுவதற்கும், மாடிவீடு கட்டுவதற்கும் இலகுவாக அனுமதி வழங்கும் பிரதேச சபை பாமர கிராம மக்கள் ஒரு அனுமதியினை பெற்றுக்கொள்ள பல இழுத்தடிப்புக்கள் செய்து வருவதாகவும், பக்கச்சார்பாக செயற்படுவதாகவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வழக்குகள் இடுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


