மிரிஹான ஆர்ப்பாட்டத்தின் போது தனது ஆட்களை களத்தில் இறக்கிய அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர்

மிரிஹானவில் அமைந்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுக்கு எதிரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில், அது சம்பந்தமாக கலந்துரையாட பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்ட பாதுகாப்பு அமைச்சில் நடந்த பாதுகாப்புச் சபைக் கூட்டத்தை அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்சங்க சேனாதிபதியே வழிநடத்தியுள்ளார் என்பது நாடாளுமன்றத்தில் இன்று தெரியவந்தது.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இது தொடர்பான தகவலை வெளியிட்டாார்.

மிரிஹானவில் ஜனாதிபதியின் வீட்டுக்கு எதிரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்த சந்தர்ப்பத்தில் பாதுகாப்புச் செயலாளர் உட்பட பாதுகாப்பு அமைச்சின் அவசர கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்சங்க சேனாதிபதியும் கலந்துக்கொண்டுள்ளார். இதனை பொறுப்புடன் கூறுகிறேன். நிஷ்சங்க சேனாதிபதியே கூட்டத்தை முழுமையாக வழிநடத்தியுள்ளார்.

நிஷ்சங்க சேனாதிபதி, இந்த கூட்டத்தில் மிரிஹான சம்பவம் தொடர்பாக தெளிவாக ஒன்றை கூறினார். பயப்பட தேவையில்லை நான் மிரிஹானவில் 200 பேரை இறக்கி விட்டுள்ளேன் என்று சொன்னார். குடும்பத்துடன் 200 பேரை இறக்கியுள்ளதாக கூறினார்.

அப்படியானால், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சீர்குலைக்கப்பட்டுள்ளது. வன்முறையை தூண்டும் வகையில் அரசாங்கம் சூழ்ச்சி செய்துள்ளது.

நாட்டு மக்கள் இதனை அறிந்துக்கொள்ள வேண்டும். இதனால், அப்படியான வன்முறைகளுக்கு செல்ல வேண்டாம் என நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவோரிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

அப்படி வன்முறையில் சம்பந்தப்பட்டதால், அரசாங்கத்தின் சூழ்ச்சியில் சிக்கி விடுவோம். இதன் மூலம் உண்மையான பிரச்சினை மூடிமறைக்கப்பட்டு விடும் எனவும் விஜித ஹேரத் கூறியுள்ளார்.

நிஷ்சங்க சேனாதிபதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மிக நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *