இருவகை பாகுபாடு உள்ள இந்த நாட்டில் எவ்வாறு சுபீட்சத்தை கட்டியெழுப்ப முடியும்-தவராசா கலையரசன்

இருவகை பாகுபாடு உள்ள இந்த நாட்டில் எவ்வாறு சுபீட்சத்தை கட்டியெழுப்ப முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் இன்று (20) பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து பேசிய பாராளுமன்ற உறுப்பினர்.

எரிபொருள் விலையேற்றம் என்பது இந்த நாட்டிலே வறுமைப்பட்ட மக்களுக்கு பெரும் சுமையாக அமைகின்றது. அந்த அடிப்படையில் இதனை நாங்கள் எதிர்ப்பதோடு, குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாகவும் வாக்களிக்கின்றோம்.

வடக்கு, கிழக்கு மக்களை தொடர்ந்தும் நசுக்கும் செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுக்கின்றது.

இந்த அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தினால் மக்கள் இன்று வீதிகளில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், ஜனநாயகம் அற்ற ரீதியில் அரசாங்கம் அவர்களைக் கையாண்டு கொண்டு இருக்கின்றது.

அரசாங்கத்தை நம்பி வாக்களித்த 69 லட்சம் மக்களை இன்று அரசாங்கம் ஏமாற்றியுள்ளது. எதிர்காலத்தில் அவர்கள் நம்பிக்கையுடன் சுபீட்சமாக வாழ்வதற்கு வழியேற்படுத்துங்கள்.

வடகிழக்கு மக்களை தொடர்ந்தும் நசுக்கும் செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுக்கின்றது. அங்கு பாரிய அழிவுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. நலிவுற்ற மக்களை மீளக்கட்டியெழுப்ப அரசாங்கத்திடம் எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழர் பிரதேசத்தை ஒதுக்கிவிட்டு ஏனைய பிரதேசங்களில் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கின்றது.

விளையாட்டுத்துறை அமைச்சர் வடக்கு கிழக்கில் துரித கதியில் தடுப்பூசி திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கூறுகின்றார். இன்னமும் கல்முனை தொகுதியில் முன்னெடுக்கப்படவில்லை. இந்த நாட்டில் ஏன் அவ்வாறு ஒரு பிரதேசத்திற்கு மாத்திரம் இன்னமும் வழங்கப்படவில்லை? எனுவும் கேள்வி எழுப்பினார்.

Leave a Reply