தேயிலை தோட்டத்தில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம்!

நுவரெலியா – கந்தப்பளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கொன்கோடியா தோட்டத்தின் தேயிலை மலையிலிருந்து இன்று (20) பிற்பகல், சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கந்தப்பளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட சடலம், பிறந்து ஓரிரு நாட்களேயான ஆண் சிசுவொன்றென அடையாளம் காணப்பட்டுள்ளதாக கந்தப்பளை காவல் நிலைய பொறுப்பதிகாரி, காவல்துறை பரிசோதகர் டி.டி. விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அதேநேரத்தில் சடலமாக மீட்கப்பட்ட சிசுவின் உடல் பகுதிகள் சிதைவடைந்துள்ளதுடன், கால்கள் இல்லாமல் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement

தோட்ட தொழிலாளர்கள் தேயிலை மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்தபோது, நாயொன்று, குறித்த சிசுவின் சடலத்தை கௌவிக்கொண்டு வருவதை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து, தொழிலாளர்கள் உடனடியாக இது குறித்து காவல்துறையினருக்கு அறிவித்திருந்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் சிசுவின் உடலை மீட்டனர்.

நுவரெலியா மாவட்ட நீதவான் உத்தரவுக்கமைய, சிசுவின் சடலம், பிரேத பரிசோதனைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சிசு தொடர்பான விபரங்கள் தெரியவராத நிலையில், மேலதிக விசாரணைகளை கந்தப்பளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply