வவுனியாவில் வெள்ளைவான் கடத்தல்; சில மணி நேரத்தில் நடந்த திருப்பம்!

வவுனியாவில் வெள்ளை வான் ஒன்றில் வந்தவர்களால் பெண் ஒருவர் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நேற்றைய தினம் (19.07) காலை வவுனியா, கோவில்குளம் பகுதியில் உள்ள அகிலாண்டேஸ்வரர் சிவன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு விட்டு வீடு நோக்கிய திரும்பிய முதிய பெண் ஒருவரை வெள்ளை வான் ஒன்றில் ஆலயம் முன்பாக வந்த நபர்கள் அழைத்துள்ளனர்.

இதன்போது, குறித்த பெண் வான் அருகில் சென்ற போது அவர்கள் குறித்த பெண்ணை வானில் இழுத்து ஏத்திக் கொண்டு சென்றுள்ளனர். குறித்த பெண்ணை சுமார் இரண்டு மணித்தியாலத்திற்கு மேலாக வானில் கொண்டு சென்ற குறித்த நபர்கள் மதியமளவில் பெண் அணிந்திருந்த 3 பவுண் காப்பினை கழற்றி விட்டு பெண்ணை மடுகந்தை பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

அங்கிருந்து, தமக்கு நடந்த சம்பவம் தொடர்பில் குறித்த பெண் உறவினர்களுக்கு தெரியப்படுத்தியதுடன், முச்சக்கர வண்டி ஒன்றில் வவுனியா பொலிஸ் நிலையம் சென்று, தாம் கடத்தப்பட்டமை தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, கடத்தப்பட்ட போது குறித்த பெண் சங்கிலி, காப்பு, மோதிரம், தோடு உட்பட 9 பவுண் நகைகளை அணிந்திருந்த போதும் வானில் கடத்தியவர்கள் 3 பவுண் காப்பினை மட்டுமே கழற்றி விட்டு பெண்ணை இறக்கி விட்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply