ரிஷாத் வீட்டில் சிறுமி உயிரிழப்பு சம்பவம் – தரகரின் வங்கிக்கணக்கிற்கே வந்துள்ள சம்பளம் தோண்ட தோண்ட வெளிவரும் பகீர் தகவல்கள்

மகளை பார்ப்பதற்கு நான்கு தடவைகள் கொழும்பிற்கு வந்த போதும் அவரை சந்திப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என ஹிஷாலினியின் தாயார் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை அவர் தம்மிடம் தெரிவித்ததாக ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் ப்ரனிதா வர்ணகுலசூரிய குறிப்பிட்டுள்ளார்.

நேர்காணலொன்றில் வைத்து ப்ரனிதா வர்ணகுலசூரிய இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

Advertisement

தரகர் பொன்னையாவின் மகள் பத்மா சில வருடங்களுக்கு முன்னர், ஹிஷாலினி இருந்த வீட்டிலேயே பணிப்பெண்ணாக இருந்துள்ளார். இதன்மூலம் தான் பொன்னையா மற்றும் ரிஷாத் பதியுதீனுக்கு இடையிலான தொடர்பு ஏற்படுகிறது.

பொன்னையா என்ன கூறுகிறார் என்றால், என்னுடைய மகளும் இங்கு வேலை செய்ததால் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லாததால் தான் நான் ஹிஷாலினியை இங்கு பணிப்பெண்ணாக வேலைக்கு அழைத்து வந்தேன்.

அத்துடன் ஹிஷாலினியை அழைத்து வந்ததற்காக தனக்கு 5000 ரூபாவும், முச்சக்கரவண்டி சாரதிக்கு 5000 ரூபாவும் வழங்கப்பட்டதாக பொன்னையா கூறுகிறார்.

ஹிஷாலினிக்கு மாத சம்பளம் 20000 ரூபா எனவும், அந்த பணம் பொன்னையாவின் வங்கி கணக்குக்கே வந்துள்ள நிலையில் சுமார் 2 லட்சம் ரூபா வரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயத்தை ஹிஷாலினியின் தாயாரும் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை ஹிஷாலினி பணிக்காக ரிஷாத்தின் வீட்டிற்கு வந்தது எப்போது என்பது தொடர்பில் சிக்கல் நீடித்து வருகிறது. தாயார் கூட சரியான தினத்தை கூறவில்லை.

கடந்த 8 அல்லது 9 மாதங்களுக்கு முன் சிறுமியை அழைத்து சென்றதாகவே தாயார் கூறுகிறார். ஆனால் பொன்னையா திகதியொன்றை குறிப்பிடுகிறார். அதில் தான் எமக்கு சந்தேகம் எழுகிறது. அதாவது அவர் கடந்த வருடம் நவம்பர் மாதம் 17ஆம் திகதி சிறுமியை அழைத்து சென்றதாக கூறுகிறார்.

எம்முடன் கதைக்கும் போது யாரும் உறுதியான திகதியொன்றை குறிப்பிடவில்லை. குறித்த சிறுமியை 15 வயதிலேயே வேலைக்கு அழைத்து வந்ததை மறைப்பதற்காக முயற்சியே மேற்கொள்ளப்படுகிறது.

ஆனால் சிறுமி 16 வயதாகும் முன்னரேயே வேலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அத்துடன் ஹிஷாலினி வேலைக்கு இருந்த காலப்பகுதியில் எந்தவொரு தினத்திலும் மகளை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என சிறுமியின் தாயார் தெரிவிக்கிறார்.

“நான்கு தடவைகள் நாம் டயகமவில் இருந்து கொழும்பிற்கு வந்தோம். இரு தடவைகள் நாம் வீட்டு வாசலுக்கே சென்ற போதும் சிறுமி இங்கு இல்லை புத்தளத்தில் இருக்கிறார் என்ற தகவல் மாத்திரமே கிடைத்தது” என்கிறார் தாயார்.

சிறுமி தீயில் எரிந்த விடயம் தொடர்பில் தாயாருக்கு தகவல் வழங்கியுள்ளது பொன்னையா. தகவல் அறிந்த நிலையில் தாயார் ரிஷாத்தின் வீட்டிற்கு செல்கிறார்.

அங்கு வைத்து தான் சிறுமி வைத்தியசாலையில் இருப்பதாக தாயாருக்கு தெரிவிக்கப்படுகிற நிலையில் அவர் வைத்தியசாலைக்கு செல்கிறார். தயார் இது தொடர்பில் தெரிவிக்கும் போது கூறுகிறார், ஒரு மாதத்திற்கு முன்பிருந்து தான் வீட்டிற்கு வர வேண்டும் என சிறுமி தெரிவித்து வந்துள்ளார் என.

அத்துடன் குறித்த வீட்டில் பணிக்கு இருக்கும் ஆணொருவரின் தொலைபேசிக்கு அழைப்பினை ஏற்படுத்தியே மகளுடன் கதைப்பதாக தாய் தெரிவித்துள்ளார்.

இதேவேளை புவக்பிட்டிய பகுதியிலிருந்து டயகமவிற்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்த குடும்பம் வந்துள்ளது. இரு இடங்களிலும் தனது மகள் எந்தவொரு ஆண் நபருடனும் தொடர்பை கொண்டிருக்கவில்லை என தாயார் தெரிவித்துள்ளார்.

வீட்டிற்குள்ளேயே இருந்து வளர்ந்த பிள்ளை எனவும் சுட்டிக்காட்டிக்காட்டியுள்ளார்.

எனவே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் ரிஷாத் வீட்டிலேயே இடம்பெற்றிருக்க வேண்டும் என தாயார் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பில் தெரிந்தாலும் கூட அவற்றை சொல்வதற்கு பொன்னையா உடன்படவில்லை என ப்ரனிதா வர்ணகுலசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply