ஒவ்வொரு மாவட்டத்திலும் டெல்டா நோயாளிகள் இருக்கலாம்- சுகாதார அமைச்சு எச்சரிக்கை

நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே தற்போதைய சூழ்நிலையை எதிர்கொள்ள மக்கள் தொடர்ந்து சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இன்று கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் டெல்டா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் இருக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், இந்த ஆண்டு க.பொ.த. சாதாரணதரப்பரீட்சை பெப்ரவரி 21 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 03 வரை நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.

இதவேளை மீண்டும் வழமையான முறையில் அரச நிறுவனங்களின் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சில நிறுவனங்களின் தலைவர்கள் குறைந்தபட்ச எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் சேவைகளை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்வு தொடர்பாக மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் எதிர்வரும் மாதங்களில் டெல்டா மாறுபாடு இலங்கையில் பரவக்கூடிய அபாயம் இருப்பதாகவும் மருத்துவர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply