லிவிங் டுகெதர் வாழ்க்கை முறை: பெண்களுக்கான சுதந்திரமா அல்லது சுரண்டலா?

சங்க காலத்திலும் அதற்கு முன்பும், திருமணமாகாத ஆணும் பெண்ணும் தற்செயலாக ஓரிடத்தில் சந்தித்து, தங்கள் பெற்றோருக்குத் தெரியாமல் காதல்கொள்வது களவொழுக்கம் என்று அழைக்கப்பட்டது.

கற்பொழுக்கம் என்பது, தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்துவது. இந்த இல்வாழ்க்கை, களவு வாழ்க்கையின் தொடர்ச்சியாகவும் இருக்கலாம்; பெற்றோர் செய்து வைத்த திருமணத்தைத் தொடர்ந்ததாகவும் இருக்கலாம் என்று, பண்டைய தமிழ் மரபில் சேர்ந்து வாழ்தல் குறித்தும், திருமணம் செய்துகொண்டு குடும்பமாக வாழ்தல் குறித்தும் பதிவுகள் உள்ளன.

ஆண் – பெண் உறவைப் பொறுத்தவரை மனித சமூகம் பல்வேறு விதமான ஏற்பாடுகளைக் கடந்து வந்திருக்கிறது. சேர்ந்து வாழ்தல், பல தார மண முறை, தற்செயலாகக் கண்டு காமுறுதல் என்றெல்லாம் இயற்கையான வாழ்முறையிலிருந்து, சொத்துடைமை மற்றும் ஆணாதிக்க சமூக உருவாக்கத்தின் போது ஒருதார மண முறைக்கு மாறுதல் அடைந்தது என்பதை சமூகவியல் ஆய்வுகளில் காணலாம்.

ஆணாதிக்க (தனிக் குடும்பங்கள் சொத்து சேர்க்கும் முறை தோன்றியதும் சேர்த்தே குறிப்பிடப்படுகிறது) சமூகம் தோன்றிய பின், பெண்கள் பல விதங்களில் ஒடுக்கப்பட ஆரம்பித்தார்கள்.

ஒடுக்குமுறை என்பது அடக்கி ஆளுதல், கட்டுப்படுத்துதல். சுரண்டல் என்பது பயன்படுத்திக்கொள்ளுதல்; உடல் ரீதியாக, உழைப்பு ரீதியாக, உணர்வு ரீதியாக ஒருவரை வயப்படுத்தி, அல்லது சமூக விதிமுறைகள் மூலம் கட்டுப்படுத்தி சுய `இலாபத்திற்காக’ பயன்படுத்திக்கொள்ளுதல் இத்தகைய சுரண்டலுக்காகவே படிநிலைகள் உருவாக்கப்பட்டு, இன்னாருக்கு இன்ன இடம், இன்ன பாத்திரம் என்று சமூகக் கட்டமைப்புகள் தோன்றின. சாதியும் அத்தகையதொரு படிநிலை. இந்த அறிமுகத்தோடு, சமீபத்தில் நிகழ்ந்த ஒரு பாலியல் சுரண்டல் குறித்து விவாதிப்போம்.

ஒரு திருமண மண்டப வாசலில் ஒரு பெண், “பாபு எந்திரிச்சு வா பாபு” என்று கதறும் ஒரு காணொளியை நீங்கள் இணையதளங்களில் பார்த்திருப்பீர்கள். 3 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த காதலன் திடீரென வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதை அறிந்த காதலி கதறி அழும் காட்சி அது.

பார்க்கும் எவரையும் உலுக்கிவிடக் கூடியது. ஆனாலும் அதைக் கண்டும் சிலர், “ஏம்மா எல்லாம் தெரிஞ்சுதான நீ அவன் கூட போன… அப்பா, அம்மா பேச்சை கேட்காம இப்படி திருட்டுத்தனமா சேர்ந்து வாழ்ந்தா இதான் நிலைமை. இதுக்குத்தான் ஒழுங்கா கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழணும்” என்பதாக தங்கள் ஒழுக்கவாதங்களை வைத்தனர்.

திருமணமும் குடும்பமும் பெண்களை என்ன செய்கின்றன?

சமீபத்தில், குமரி மாவட்டத்தில் தன் கணவரின் வீட்டின் முன்பு சாலையில், வரதட்சணையால் தன்னை ஒதுக்கிய கணவருடன் தன்னை சேர்த்து வைக்கக்கோரி பெண் வழக்கறிஞர் சாலையில் உருண்டு கதறி அழுத காட்சி செய்திகளில் இடம்பெற்றது. உண்மையில் திருமணம், குடும்பம் இவையெல்லாம் பெண்ணுக்குப் பாதுகாப்பானவையாக உள்ளனவா? குடும்பம் என்பது எத்தகையதொரு வன்முறையான அமைப்பு என்பதை, இந்தச் செய்தி முதல் சமீபத்தில் நடந்த விஸ்மயாவின் மரணம் வரை மெய்ப்பித்துள்ளது.

வரதட்சணைக் கொடுமை, மாமியார் கொடுமை, மாமனார் அல்லது குடும்பத்தில் உள்ள மற்ற ஆண்களால் பாலியல் துன்புறுத்தல், இரட்டை உழைப்பு, பிள்ளை பெறுதலில் நிர்ப்பந்தம், விருப்பமில்லையெனிலும் அல்லது முடியாத நிலையிலும் கணவனோடு உடலுறவுகொள்ள வேண்டிய கொடுமை என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

குறைந்தபட்சம் சேர்ந்து வாழ்தலில், முற்போக்கு சிந்தனையுடைய இணையாக இருப்பின் அன்பின் அடிப்படையிலும், கொள்கையின் அடிப்படையிலும் வீட்டு வேலையைப் பகிர்ந்துகொள்ளுதல், சுதந்திரமாக முடிவெடுத்தல், பொருளாதார சுதந்திரம் கிடைக்கும். விருப்பமின்றி வாழ்தல், உடலுறவு கொள்ளுதல் போன்றவற்றிலிருந்தும் விடுதலை கிடைத்திடும்.

ஆனால், சேர்ந்து வாழ்பவர்கள் அனைவருமே முற்போக்கு சிந்தனை உடையவர்களா? முற்போக்கு சிந்தனை உடைய ஆண்கள் அனைவருமே முற்றிலுமாக ஆணாதிக்கத்திலிருந்து விடுபட்டவர்களா என்னும் கேள்வியும் உள்ளது.

லிவிங் டுகெதர் வாழ்க்கையும் சுரண்டல்கள் நிறைந்ததுதானா..?

ஆணாதிக்க அமைப்பில் பெண்களுக்குக் குடும்பம் எந்தளவுக்குப் பாதுகாப்பற்ற, சுரண்டல் நிறைந்த ஏற்பாடோ, அதே போல் நவதாராளவாத யுகத்தின் பாதுகாப்பற்ற, சுரண்டல் நிறைந்த ஏற்பாடுதான் லிவிங் டு கெதர் ஏற்பாடு என்பதை நிகழ்வுகள் உணர்த்திக்கொண்டே இருக்கின்றன!

இதைப் படித்ததும் முற்போக்கு ஆண்களும் பெண்களும் பொங்குவார்கள்! அவர்கள் பொங்கும் நேரத்தில் எங்கோ ஒரு பெண் இப்படி கதறிச் சாகிறாள்!

ஆண் தலைமையிலான குடும்ப அமைப்பானது ஏற்படுத்தும் `தொல்லைகளின்’ காரணமாக, சாதியமைப்பின் ஆதிக்கத்தால், அந்தஸ்து, மதம் உள்ளிட்ட ஏதோ ஒரு காரணத்தால் லிவிங் டு கெதர் ஏற்பாடு ஒப்பீட்டளவில் சுதந்திரமானது.

அதே போல் கைம்பெண், திருமணம் முறிந்து தனித்து வாழும் பெண், குறிப்பாகக் குழந்தை உள்ள பெண், சமூக அழுத்தத்தால் மறுமணம் செய்துகொள்ள இயலாத பெண் அல்லது தன் துணை விவாகரத்துக் கொடுக்காமல் துன்புறுத்துவதால் பாதிக்கப்பட்டுள்ள ஆண் அல்லது பெண்… இவர்களுக்கு சேர்ந்து வாழ்தல் என்பது கைக்கொடுக்கும் ஏற்பாடாக இருக்கிறது.

மேலும் குறிப்பாக, குடும்ப அமைப்பில் ஈடுபட்டால் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் (இப்போது ஆண்களும் குழந்தை பெற்றுக்கொள்வதால் சுதந்திரம் பறி போகிறது என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள்), சொத்து சேர்க்க வேண்டும், பெண்கள் வெறும் பணிப் பெண்ணாக, அடிமையாக மாறிப் போக வேண்டியுள்ளது போன்ற காரணங்களால் சேர்ந்து வாழும் முறைக்கு நாம் ஆதரவளிக்கலாம்.

ஆனால், சுரண்டலான சமூக அமைப்பின் ஒடுக்குமுறையிலிருந்து உருவாகும் எந்த ஒரு ஏற்பாடும், சுரண்டலாகவே வடிவெடுத்து நிற்கிறது என்பதைத்தான் காணொளியில் காணும் கதறலும், பார்வைக்கு வராத இன்னும் பலரின் கண்ணீரும் நிரூபிக்கின்றன.

பெண்களைக் கழட்டிவிடும் ஆணின் அதிகாரம்!

சேர்ந்து வாழ்ந்துவிட்டு திடீரென, `என் வீட்டில் நம் உறவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’, `என்னால் என் அம்மாவிடம் பேசிப் புரியவைக்க முடியவில்லை’, `அப்பா சாதி பார்க்கிறார்’ என்று காரணங்கள் சொல்லி, திடீரென ஓர் ஆண் தன்னை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்ணைக் கைவிட்டுச் செல்கிறான்.

பெண்களும் ஆண்களை விட்டுச் செல்லலாம். ஆனால், ஒப்பீட்டளவில் ஆண்களுக்கே இத்தகைய அதிகாரமும், பலமும் உள்ளது. பெண் என்பவள் குடும்பத்துக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டியவள், அதை மீறி ஏதாவது செய்தால் அனுபவிப்பாள் என்னும் சமூக நிலைப்பாடே பெண்களைக் கழட்டிவிடும் அதிகாரத்தை ஆண்களுக்கு வழங்குகிறது.

சேர்ந்து வாழ்பவர்கள் பொருத்தமில்லாமல் அல்லது உறவு கசந்து ஒருவரை ஒருவர் புரிந்துணர்வின் அடிப்படையில், ஒப்புதலின் அடிப்படையில் பிரிவது வேறு. ஆனால், பெரும்பாலும் ஆண்கள் பெற்றோர், சமூகம் என்னும் காரணங்களைச் சொல்லி பெண்களை கை கழுவிச் செல்கின்றனர்.

அதுமட்டுமல்லாது, போலி சுதந்திரமும் முற்போக்கும் பேசிக்கொண்டு தங்கள் பாலுறவு வேட்கைக்காக லிவிங் டுகெதர் முறைக்குள் வருபவர்களும் உண்டு. தன்னை விட்டு பிறிதொரு பெண்ணை நாடுதல் தெரிந்து பெண்கள் கேள்வி எழுப்புகையில், ஆணால் அதை சகித்துக்கொள்ள முடிவதில்லை. சுதந்திரமான பாலுறவு தேவையெனில் இருவரும் தொடக்கத்திலேயே பேசி அதை நிறுவிக்கொள்ள வேண்டும். அதுவல்லாது பொய்மொழிகள் கொடுத்து இணைந்த பின் சுதந்திரவாதம் பேசுவது ஏமாற்று வேலை. அதுவும் ஒருவகை சுரண்டலே.

பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

சேர்ந்து வாழ்தல் என்பது காதலால் கட்டியெழுப்பப்பட்டு `ஒடுக்குமுறை’ அமைப்புக்கு எதிரான கலகச் செயல்பாடு என்றால், அதை ஏதோ ஒரு வகையில் `பாதுகாப்பை’ உறுதி செய்வதாக அமைத்துக்கொள்ள பெண்கள் ஆண்களிடம் வலியுறுத்த வேண்டும். பிடித்தால் சேர்ந்து வாழ்வோம், இல்லையெனில் பிரிந்து செல்வோம் என்பதில் `பிடிக்கவில்லை’ என்பது தோற்றத்தில் பெண்களுக்கு சாதகமானது போல் தோன்றினாலும், ஆணுக்கே அது அனுகூலமாக இருக்கிறது.

எனவே, லிவிங் டுகெதர் முறையில் இணைவோர் குறைந்தபட்சம் சேர்ந்துவாழும் உடன்படிக்கையை (Cohabitation agreement) போட்டுக்கொள்வது பாதுகாப்பானதாக இருக்கும். இதை, சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படக்கூடிய வகையில் சட்ட நிபுணர்களின் உதவியோடு பதிவு செய்துகொள்வது அவசியம்.

முடிந்தவரை பெற்றோரிடம் தெரிவித்துவிட்டு சேர்ந்து வாழ்வதற்கு முயல வேண்டும். ஓர் எளிய முறையிலான சமூக அறிவிப்பை மேற்கொள்ளலாம். இதன் மூலம், ஏமாற்றி விட்டுச் செல்கையில் அந்தப் பெண் சட்டத்தின் உதவியையாவது நாட இயலும்.

ஏற்கெனவே புகார்கள் உள்ள அமைப்பிடமே அடைக்கலம் நாடச் சொல்வது முரண்பாடாகத் தோணலாம். ஆனால், இது சுரண்டல் நிறைந்த ஆணாதிக்க சமூகம் என்னும் போது பெண்களைப் பாதுகாப்பதற்குரிய வழிகளை யோசிக்க வேண்டியுள்ளது.

முறைப்படுத்தப்பட்ட திருமணம் என்னும் போது குறைந்தது உடனடியாக ஓர் ஆண் கழட்டிவிட்டு செல்ல இயலாது என்னும் `பிடிப்பு’ சட்டரீதியாக, சமூகரீதியாக இருக்கிறது. ஆனால், அதுவே `பொருந்தா’ உறவாகிப் போனால் அல்லது வன்முறையான உறவுகள் நிறைந்த குடும்பமாகிப் போனால், விவாகரத்துப் பெற இயலாத அளவுக்குப் பெண்ணுக்கும் ஆணுக்கும் பெரும் துன்பத்தைத் தருவதாகவும் அமைந்து விடுகிறது. திருமணத்துக்குப் பின் பொருந்தா உறவை முறித்துக்கொள்வது, மறுமணம் போன்றவை எளிமையாக இருப்பின், ரகசியமாகச் சேர்ந்து வாழ்தல் தேவைப்படாது என்று கருதுகிறேன்.

குடும்ப வாழ்வில் எப்படிப் பெண்களை, `பொறுத்துப் போ, ஆம்பிளைன்னா அப்படித்தான் இருப்பான், விட்டுக் கொடுத்து போ’ என்று பெண்ணுக்கு நிர்ப்பந்தங்கள் உள்ளனவோ, அதே போல் சேர்ந்து வாழும் வாழ்க்கையிலும், `ஆம்பிளை அப்படித்தாம்மா வருவான், போவான், நீதான் எதுக்கும் தயாரா இருந்திருக்கணும்’ என்னும் வாதங்கள் சமூக அளவில் ஆணை எளிதாக விடுவித்துவிடுகின்றன.

சேர்ந்து வாழ்தல் என்பது எந்த வகையிலும் ஆணை பதில்சொல்ல வேண்டிய நிலைக்கு (Accountable) உள்ளாக்குவதில்லை. காவல் துறைச் சென்றாலும் பெண்ணின் ஒழுக்கம்தான் கேள்விக்குள்ளாகும். எங்கு சென்று முறையிட்டாலும் அவமானம் மட்டுமே மிஞ்சும்.

சமூக மாற்றத்துக்காகவும், ஆண் – பெண் சமத்துவத்துக்காகவும் முன்னெடுக்கப்படும் புரட்சிகர கருத்துகளை, தம் பாலியல் வேட்கைக்காகப் பயன்படுத்திக் கொள்ளும் நபர்கள், சேர்ந்து வாழ்தலை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவை அமைத்துக்கொள்ளவும் சேர்ந்து வாழ்தலை சிலர் நாடுகிறார்கள். ஆனால், அத்தகைய ஆண்கள் தங்கள் மனைவிக்கு அதே சுதந்திரத்தை கொடுப்பார்களா என்றால், இல்லை! வாயளவில் `அவ விருப்பம்’ என்பார்கள், ஆனால் நடைமுறையில்?!

தொடர்ந்து ஆணாதிக்க வஞ்சகத்துக்கும் சுரண்டலுக்கும் உள்ளான பெண் மனதளவில் பாதிக்கப்பட்டு, அவளும் எதிர் வன்முறையாளராக, ஆதிக்கம் செலுத்துபவளாக, ஹிஸ்டெரிக்காக மாறிப் போவாள்… ஆண் வெறுப்பு மனநிலைக்கும் ஆளாகலாம். அப்படிப்பட்ட பெண்ணோடு இணையும் ஆணின் நிலை பரிதாபகரமானது. பெண்ணின் நிலை அதைவிட பரிதாபகரமானது. சமூகத்தின் புரிந்துணர்வற்ற பிடிவாதமான ஒரு போக்கினால் ஆண், பெண், மாற்றுப்பாலினம் என அனைவரது காதல் வாழ்வும் பொய்த்துப் போகிறது.

தீர்வுதான் என்ன..?

முடிவாக, ஒரு பெண்ணுக்குக் குடும்ப அமைப்பும் பாதுகாப்பைத் தருவதில்லை. சேர்ந்து வாழ்தலும் பாதுகாப்பாக இல்லையெனில் தீர்வுதான் என்ன? `கல்யாணமே பரவாயில்ல’ என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா?

ஏற்றத்தாழ்வு நிறைந்த ஆணாதிக்க சமூகத்தில் கல்யாணம் என்பது எந்தளவுக்கு ஒரு போலியான ஏற்பாடோ, அதே போல்தான் லிவிங் டு கெதர் ஏற்பாடும்.

ஆண் – பெண் உறவு மேம்பட்டு, ஏமாற்று குறைய வேண்டுமெனில் பெண்களின் நிலை உயர வேண்டும். குடும்ப அமைப்பு ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும். பெண்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். அவளின் விருப்பு, வெறுப்புக்கு இடமிருக்க வேண்டும். பிள்ளைப் பேறு விஷயங்களில் அவள் ஒப்புதல் தேவை.

உடலுறவில் பெண் நிறைவடைவதை உறுதி செய்யும் அளவுக்கு ஆண் திறந்த மனதுடன் அதில் ஈடுபட வேண்டும். வீட்டு வேலையிலிருந்து பெண்கள் விடுவிக்கப்பட வேண்டும். ஆண் மேலே, அவனுக்குக் கீழ்தான் பெண் என்னும் படிநிலையை ஒழிக்க வேண்டும்.

தனிச் சொத்து சேர்க்கும் குடும்ப அமைப்பை தகர்த்து அன்பு, சுயமரியாதை, சமத்துவமான உறவுமுறை கொண்ட குடும்ப அமைப்பை நிறுவ வேண்டும். பிள்ளைப் பேறு, முதியவரைப் பராமரித்தல், சமையல் வேலை போன்றவற்றை பொதுச் சமூகக் கூட்டுறவு முறையில் (சுழற்சி முறையில்) நிறுவுகையில் பெண் என்னும் அடிப்படையிலான பாலின உழைப்புப் பிரிவினை ஒழியும்.

மேற்சொன்னவை அனைத்தும் பொதுவுடைமை தத்துவ வழிகாட்டுதல். ஆண் – பெண் சமத்துவம் மட்டுமன்றி சாதி, மத, செல்வத்தின் அடிப்படையிலான வர்க்க பேதமற்ற ஒரு சமூக உருவாக்கமே அனைத்துவிதமான ஏற்றத்தாழ்வுகளையும், ஒடுக்குமுறையையும் சுரண்டலையும் ஒழிக்கும் வழி. ஆணாதிக்கத்தை ஒழிக்கவில்லை எனில் குடும்ப அமைப்பின் வன்முறைக்கும் ஆணாதிக்கச் சுரண்டலுக்கும் பெண்கள் பலியாகிக்கொண்டேதான் இருப்பார்கள். ஆங்காங்கே ஆண்களும் மாற்றுப் பாலினத்தாரும்!

பெண்களின் நிலைக்கு தனிப்பட்ட ஆணை எந்தளவுக்குப் பொறுப்பாக்குகிறோமோ, அதே அளவுக்கு ஒட்டுமொத்த சமூகமுமே பொறுப்பு என்று உணர்ந்து மாற்று ஏற்பாடுகளை விவாதிக்க வேண்டிய அவசியம் பெருகிக்கொண்டே வருகிறது.

விவாதிக்கத் தயாரா?

Leave a Reply