
ஜப்பான், ஓக 27
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக டோக்கியோ செல்லும் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் உத்தியோகபூர்வ சந்திப்பில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் குறித்த இதுவரை தகவல்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தரப்புக்கள் இதனை தெரிவித்துள்ளன.
எனினும் இலங்கைக்கான உதவிகள் குறித்து ஜப்பான், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளை முன்னிலைப்படுத்தி மாநாடு ஒன்று ரணில் விக்கிரமசிங்க ஜப்பானிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சீனாவின் ஆராய்ச்சி கப்பலின் ஹம்பாந்தோட்டை வருகை காரணமாக இந்திய- இலங்கை உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாகவே இலங்கைக்கு செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் வகையில் இந்திய வெளிவிவகார அமைச்சு கடந்த வியாழன் அன்று அறிவுறுத்தல்களை வெளியிட்டதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
கடந்த ஆகஸ்ட் 16ம் திகதி சீன செயற்கைக்கோள் மற்றும் ஏவுகணை கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5 இலங்கை துறைமுகத்துக்கு வந்தநிலையில் 22ஆம் திகதி அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
இந்தியாவின் ஆட்சேபனைகளுக்குப் பின்னர், கப்பலின் வருகையை முழுமையாக ஒத்திவைக்குமாறு இலங்கை அரசாங்கம் சீனாவிடம் கேட்டுக் கொண்டாலும் சீன அரசாங்கம் ஹம்பாந்தோட்டைக்கு வருவதை சில நாட்கள் தாமதிக்க மாத்திரம் ஒப்புகொண்டது.
இந்த சூழ்நிலையில் இந்தியாவையும் இலங்கையையும் ஒரே நேரத்தில் சமாளிக்கும் நெருக்கடி நிலையில் இலங்கை செயற்பட்டது.
குறித்த பிரச்சினை தொடர்பில் இந்திய பிரதமரின் தரப்புக்கு உரிய விளக்கங்களும் வழங்கப்பட்டன.
எனினும் கப்பலுக்கு அனுமதி வழங்கிய கொழும்பின் முடிவின் மீது இந்தியாவின் அதிருப்திக்கு மத்தியிலேயே இந்திய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் வகையில் இந்தியாவின் அறிவிப்பு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சீன கப்பலை அனுமதித்தமையானது, பாரிய பிரச்சினை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனினும் எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கும், நம்பிக்கையின்மைக்கு இடமளிக்காமல் இருப்பதற்கும் உரிய கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட குறிப்பிட்டுள்ளார்.
சீன கப்பலுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காலத்தில் அனுமதி வழங்கப்பட்ட விடயத்தில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.
இலங்கையில் நெருக்கடியான சூழ்நிலை ஒன்று நிலவுகின்ற இந்தச் சந்தர்ப்பத்தில், கப்பல்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுக்கு இடையில் வேறுபாடு காண்பதில் கொழும்பில் ஒரு குழப்ப நிலை இருந்திருக்கலாம்.
துரதிர்ஷ்டவசமாக ஒப்புதல் வழங்கப்பட்டவுடன், அவற்றைத் திரும்பப் பெறுவது கடினமாக இருந்தது என்று மொரகொட இந்திய ஊடகம் ஒன்றிடம் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இந்தியாவும் இலங்கையும் கடல்சார் பாதுகாப்பு பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து புதிய ‘கட்டமைப்பை’ உருவாக்க வேண்டும் என்று உயர்ஸ்தானிகர் அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவி வருகின்ற நிலையில், இந்திய-இலங்கை ஒத்துழைப்பின் அடிப்படையில் எதிர்கால உறவுகளை பார்பதே சிறந்தது என்றும் மொரகொட குறிப்பிட்டுள்ளார்.



