அரசாங்கத்தின் காணி சுவிகரிப்புக்கு எதிராக அகில இலங்கை இளைஞர் முன்னணி கடுமையான கண்டனங்களையும், எதிர்ப்பினையும் தெரிவித்துக் கொள்வதோடு நீதியான முறையில் போராடுவோம் என அகில இலங்கை இளைஞர் முன்னணியின் தலைவர் இராசையா விக்டர்ராஜ் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பாதுகாப்பு வலயம், கண்ணி வெடி பிரதேசம், தொல்பொருள் ஒதுக்கப்பட்ட காடு என தமிழர் தாயக பூமி திட்டமிட்ட ரீதியில் ஒடுக்கப்பட்டுள்ள போதிலும், தற்போது வவுனியாவில் 3000 ஏக்கரிற்கும் அதிகமான காணிகளை இராணுவத்திற்கு வழங்குவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கையை ஒரு போதும் நாம் ஏற்கப் போவதும் இல்லை. அவற்றை அனுமதிக்கப்போவதும் இல்லை.
நாடே பொருளாதார பிரச்சனையில் மீள முடியாத நிலையில் உள்ள போது, சாதாரண விவசாயத்தினை வாழ்வாதாரமாக கொண்ட மக்கள் அதை விட அதிகமான வாழ்க்கைச் சுமையை எதிர்கொள்கின்ற நிலையில் இழப்புக்களுக்கு மேல் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாது.
தொடர்ந்து இளைஞர் முன்னணியின் ஒத்துழைப்புடன் நிச்சயமாக நீதியான முறையில் போராடுவோம். சமரசம் என்ற பேச்சுக்கு எங்கள் இனம் சனத்திற்கு எதிராக இறைவனே வந்தாலும் இடமேயில்லை.
வழமைபோல அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்கள் தலையாட்டி பொம்மையாக இல்லாமல் வாய் திறந்து எதிர்பார்களா என்பது நிச்சயம் இல்லை என்பதுதான் பதிலாகும்.
நாங்கள் மக்கள் இல்லாத மண்ணை நேசிக்கவில்லை. மாறாக மக்களுக்காகவே இந்த மண்ணை நேசிக்கின்றோம்.- என்றுள்ளது.
பிற செய்திகள்



