22க்கு எதிரான 9 மனுக்கள் தொடர்பான உயர்நீதிமன்றின் வியாக்கியானம் சபாநாயகருக்கு!

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த 9 மனுக்கள் தொடர்பான உயர் நீதிமன்றின் வியாக்கியானம் சபாநாயகருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 22ஆம் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட 9 மனுக்கள் மீதான பரிசீலனை அண்மையில் நிறைவடைந்திருந்தது.

22 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துகள், அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்குமாறு கோரி, சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு, கலாநிதி குணதாச அமரசேகர உள்ளிட்ட 9 பேரினால் குறித்த மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அந்த மனுக்களில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டிருந்தார்.

இதேவேளை, இன்றைய அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மின், குடிநீர் கட்டணங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு என்பனவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பிற செய்திகள்

Leave a Reply