வடக்கில் வாழும் மக்களுக்கு அவர்களது அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்கான சுதந்திரம் தொடர்ச்சியாக மறுக்கபடுகின்றது என்று விசனம் வெளியிட்டுள்ள சட்டத்தரணியும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான அம்பிகா சற்குணநாதன், அரசாங்கம் கூறுகின்ற நல்லிணக்கம் இதுதானா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கார்த்திகைத் தீபத்திருநாளன்று தீபங்களை ஏற்றியவர்களிடம் கடந்த வருடம் இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டனர். அதே சம்பவம் இவ்வருடமும் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கார்த்திகைத் தீபத்திருநாளை முன்னிட்டு மக்கள் தீபங்களை ஏற்றிக்கொண்டாடிய வேளையில், மாவட்டத்தின் சில இடங்களில் அதனைக் குழப்பும் இராணுவத்தினர் செயற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
நவம்பர் மாதம் 27 ஆம் திகதியன்று போரில் உயிரிழந்த உறவுகளின் நினைவிடங்களுக்குச் சென்று விளக்கேற்றி அவர்களை நினைவுகூருதல் பலவருடங்களாக இடம்பெற்றுவரும் நிலையில், அண்மைக்காலத்தில் அதற்குத் தடைகளும் இடையூறுகளும் ஏற்படுத்தப்பட்டுவருகின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில் கார்த்திகைத்தீபத்திருநாளை முன்னிட்டு தீபங்கள் ஏற்றப்பட்டதால் குழப்பமடைந்த இராணுவத்தினர், தீபம் ஏற்றப்பட்டிருந்த சில வீடுகளுக்குச்சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் அச்சுறுத்தும் வகையிலும் செயற்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வெளியான செய்தியை மேற்கோள்காட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அம்பிகா சற்குணநாதன்,
‘கடந்த வருடமும் கார்த்திகைத்தீபத்திருநாளன்று தீபங்களை ஏற்றியவர்களிடம் இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டனர். அதே சம்பவம் இவ்வருடமும் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
வடக்கில் வாழும் மக்களுக்கு அவர்களது அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்கான சுதந்திரம் தொடர்ச்சியாக மறுக்கப்படுகின்றது. அதுமாத்திரமன்றி இதுதான் அரசாங்கம் கூறுகின்ற நல்லிணக்கமா? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
அவரது பதிவை மேற்கோள்காட்டி மீள்பதிவொன்றைச்செய்திருக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்புச்செயலாளர் ஜி.காசிலிங்கம், குறித்த செய்தியைக் களத்திலிருந்து எழுதிய ஊடகவியலாளருடன் தான் பேசியதாகவும் அம்பிகா சற்குணநாதனால் கூறப்படுவதைப்போன்று யாரும் துன்புறுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அப்பகுதிக்குப் பொலிஸார் சென்றதுடன் அங்கு நடைபெறும் விடயங்கள் தொடர்பில் மக்களிடம் விசாரித்ததாகவும் அதற்கு மக்கள் ‘இது இந்துக்களின் பண்டிகை’ என்று விளக்கமளித்ததாகவும் அதன்பின்னர் பொலிஸார் அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எழுதுமட்டுவாழில் வன்முறைக்கும்பல் வெறியாட்டம்: உடைமைகளுக்கு சேதம்!




