கடந்த ஆண்டு கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி மறைந்த இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ். ஊடக அமையத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது மழைந்த ஊடகவியலாளரின் திருவுருவப்படத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தான் மலர் மாலை அணிவித்தார்.
ஈகைச்சுடலை வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா. கஜதீபன் ஏற்றினார்.
அதனைத்தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
கொடிகாமத்தைச் சேர்ந்த பிரகாஸ் தனது ஏழாவது வயதில் தசைத்திறன் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.
அதன்காரணமாக அவர் தரம் ஐந்துடன் தனது பாடசாலைக் கல்வியை இடைநிறுத்திக்கொண்டார்.




எனினும் அவரின் விடாமுயற்சியால் ஊடக துறையில் தனக்கென ஒரு இடத்தை பதித்தவர்.
இவர் சுயாதீன ஊடகவியலாளராக யாழ்ப்பாணத்திலிருந்து இருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள், செய்திகள் எழுதியதுடன் உள்நாட்டு, வெளிநாட்டு இணையத்தளங்களுக்கும் செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதிவந்தார்.
அத்துடன் பல இணையத்தளங்களில் செய்தி பதிவேற்றுநராகவும் கடமையாற்றினார்.
இந்தநிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு செப்ரெம்பர் 2ஆம் திகதி கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.



