புத்தளம் மதுரங்குளி – 10 ம் கட்டை பாலத்திற்கு கீழ் கழிவுப் பொருட்கள் கொட்டப்படுவதால் தாம் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கி வருவதாக அந்தப் பகுதி ஊடாக போக்குவரத்து செய்யும் பயணிகளும், சிறுகடல் மீனவர்களும் தெரிவிக்கின்றனர்.
மேலும்,கணமூலை – 10 ஆம் கட்டை வீதியில் உள்ள சிறுகடலை ஊடறுத்து கட்டப்பட்டுள்ள பெரிய பாலத்திற்கு கீழேயும், அருகிலும் இவ்வாறு கழிவுப் பொருட்கள் கொட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த, பாலத்திற்கு கீழ் பகுதியில் சிறுகடல் தொழிலாளர்கள் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வருவதுடன், அவ்வீதியூடாக நாளாந்தம் நூற்றுக்கணக்கானோர் பயணிப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், மேற்படி பாலத்திற்கு கீழும், அருகேயும் வீட்டுக் கழிவுப் பொருட்கள் , கண்ணாடித் துண்டுகள் மற்றும் ஆடு, மாடுகளின் தோல்கள், எலும்புகள் உள்ளிட்ட பல கழிவுப்பொருட்கள் கொட்டப்படுவதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் மீனவர்கள் கூறுகின்றனர்.
அத்துடன், மிருகங்களின் கழிவுப் பொருட்களையும், எலும்புகளையும் இந்தப் பகுதியில் கொட்டுவதால் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளும் சிறுகடல் மீனவர்களின் வலைகள் சேதமடைந்து காணப்படுவதாகவும் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேலும், அதுமாத்திரமின்றி, மீன்பிடிப்பதற்காக சிறுகடலுக்குள் இறங்கும் போது கழிவுப் பொருட்கள், கண்ணாடித் துண்டுகள் என்பன தமது க்கு மற்றும் கால்களில் காயங்களை ஏற்படுத்தி விடுவதாகவும் அந்தப் பகுதி சிறுகடல் மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை, மீன் இனம் மற்றும் இறால் பெருக்கத்திற்கும், கால் நடைகளின் உணவு, கடற்கரை பாதுகாப்பு, கடல் வளங்களை பேணுதல், கடல் நீரை தூய்மையாக்குதல், கடல் வாழ் அங்கிகளுக்கான வாழ்விடமாக, பசளை உற்பத்திக்கு, பறைவைகளின் புகழிடமாக, மண் அரிப்பை தடுப்பது என பல்வேறு காரங்களுக்காக இந்தப் பகுதியில் கண்டல் தாவரங்கள் நடப்பட்டிள்ளன.
எனினும், இவ்வாறான கழிவுப் பொருட்களை இந்தப் பகுதியில் கொட்டுவதால் இந்தப் பிரதேசம் மற்றும் சூழலுக்கும் இது பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவே, இந்த விடயம் தொடர்பில் புத்தளம் பிரதேச சபை மற்றும் முந்தல் பிரதேச சுகாதார அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மக்களும், மீனவர்களும் கூட்டாக கோரிக்கை விடுக்கின்றனர்.



பிற செய்திகள்



