புத்தளம் மாவட்டத்தில் கருவாட்டுக்கு பெரும் தட்டுப்பாடு காணப்படுவதாக பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.
எனினும் முன்னரை விடவும் அதிக விலைக்கு கருவாடுகள் விற்பனை செய்யப்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி, சின்னப்பாடு, தொடுவா, உடப்பு ஆகிய கரையோரப் பகுதிகளில் மீன்பிடித் தொழில் இன்மையால் இவ்வாறு கருவாட்டு உற்பத்தியை மேற்கொள்ள முடியாமல் போயுள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.
எனினும், முல்லைத்தீவு உள்ளிட்ட வடபகுதிகளில் இருந்து கொண்டுவரப்படும் சாலை, சூடை மீன்களே கருவாட்டு உற்பத்திக்காக பயன்படுத்துவதாக உடப்பு மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனினும் , இலாபம் இன்றி தமது வாடிக்கையாளர்களுக்காக தாம் மேற்படி கருவாடுகளை உற்பத்தி செய்வதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
அத்தோடு, கருவாடு உற்பத்தி செய்வதற்காக முன்னரை விடவும் இப்போது உற்பத்தி செலவுகள் இரண்டு, மூன்று மடங்குகளையும் தாண்டியுள்ளது எனவும் உடப்பு பகுதி கருவாட்டு உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வாறு கருவாட்டு உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளதால், ஒரு கிலோ சாலைக் கருவாடு 700 முதல் 950 ரூபா வரை விற்பனை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும் உடப்பு பிரதேச கருவாட்டு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னர் 300 ரூபா முதல் 380 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட சாலைக் கருவாடு இப்போது இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

பொருளாதார ரீதியாக தாம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோழி இறைச்சி, மாட்டிறைச்சி மற்றும் மீன்கள் என்பனவற்றை உணவுக்காக அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்ய முடியாத நிலையில் முட்டை மற்றும் கருவாடுகளை கொள்வனவு செய்யப் போனாலும் அதுவும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் தாம் சிரமங்களை எதிர் நோக்கி வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, புத்தளம் மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் அடுத்த மாதமளவில் கரைவலை தொழில் ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும், அதன் பின்னர் மீன்கள் மற்றும் கருவாடுகளின் விலைகள் குறைவடையும் எனவும் மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பிற செய்திகள்





