முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவின் பனிக்கன்குளம், கிழவன்குளம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாங்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றனர்.
இவர்களுக்கும் பாடசாலைக்கும் இடையில் சுமார் பத்து கிலோமீற்றர் இடைவெளி காணப்படுகிறது. இவர்கள் பாடசாலைக்கு செல்ல வேண்டியுள்ள ஏ -9 வீதியூடாக பல போக்குவரத்து சேவைகள் இடம்பெறுகின்ற போதும், இந்த பாடசாலை மாணவர்களுக்கான சேவையை வழங்குவதில் பேருந்து சாரதிகள் நடத்துநர்கள் சரியாக செயல்படவில்லை என மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.
மாணவர்கள் வீதியில் நின்று பேருந்தை மறிக்கும் போதும் அவர்களை ஏற்றாது செல்கின்ற அரச மற்றும் தனியார் பேருந்துகளால், மாணவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு, பாடசாலைக்கு உரிய நேரத்திற்கு செல்லவும் பாடசாலையிலிருந்து மீண்டும் உரிய நேரத்திற்கு வீடு திரும்பவும் முடியாத நிலைமையில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை முதல் பாடசாலையில் பரீட்சையில் கலந்து கொள்ள வேண்டிய நிலையில் மாணவர்கள் காலை 6.40 மணிமுதல் வீதியில் நின்று 8 மணியை கடந்தும் பேருந்துகள் எவையும் ஏற்றி செல்லாத காரணத்தினால் ஏ9 வீதியை மறித்து போராட்டம் நடத்தினர்.

இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாங்குளம் பொலிசார் வீதியை திறந்து விடுமாறும், மக்களை வந்து முறைப்பாடு பதிவு செய்யுமாறும், தாங்கள் நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்ததை தொடர்ந்து மக்கள் வீதியை திறந்து விட்டனர்.
சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது இதன்பின்னர் மக்கள் மாங்குளம் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்தும் தீர்வில்லையேல் முழுமையாக வீதியை மறித்து போராட்டம் செய்வோம் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.
பிற செய்திகள்





