கொழும்பு, செப் 6
ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின்போது இலங்கையின் அரசமைப்பைமீறும் வகையிலான வெளியாக பொறிமுறைகளை ஏற்பதற்கு நாம் தயாரில்லை. வெகுவிரைவில் உண்மையை கண்டறியும் பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் அடுத்த வாரம் ஆரம்பமாகின்றது. இதன்போது இலங்கையின் அரசமைப்புக்கு உட்பட்ட வகையிலேயே அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமையும். அரசமைப்பைமீறி செயற்படுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் தயாரில்லை. அவ்வாறு செய்வதற்கு மக்கள் அதிகாரம் வழங்கவும் இல்லை.” எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.
” 2009 இல் போர் முடிந்துவிட்டது. ஆனாலும் மனித உரிமை மீறல் பிரச்சினைகள் இன்னும் தீரவில்லை. அது இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தொடரும் எனவும் தெரியவில்லை. எனவே, இதற்கு முடிவு கட்டப்பட வேண்டும். அனைவரும் ஏற்கக்கூடிய பொறிமுறையொன்றை எமது அரசமைப்புக்கு உட்பட்ட வகையில் நிறுவ வேண்டும். அந்தவகையில் உண்மையை கண்டறியும் பொறிமுறையொன்றை ஸ்தாபிக்க முயற்சிக்கின்றோம் என்றும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.