சர்வதேச நாணயநிதியத்தின் திட்டங்கள் குறித்த விபரங்களை முன்கூட்டியே நாடாளுமன்றத்தில் வெளியிடும் நடைமுறையை இலங்கை ஒருபோதும் பின்பற்றவில்லை என தெரிவித்துள்ள மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க வரிகளில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் தொடர்பான விடயங்களை அவற்றை நடைமுறைப்படுத்தும்போதே அறிவிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடந்த காலங்களில் சர்வதேச நாணயநிதியத்தின் 16 திட்டங்களில் கைச்சாத்திட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கையின் நிதியமைச்சர் வழமையாக சர்வதேச நாணயநிதியத்துடன் பொருளாதார கொள்கைகள் குறித்த குறிப்பாணையில் கைச்சாத்திடுவார்.
நான் அறிந்தவகையில் அந்த கட்டத்தில் அது குறித்த விபரங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை அமைச்சரவையிலும் சமர்ப்பிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணயநிதியத்துடனான விபரங்களை வெளியிடுவது வெளிப்படைத் தன்மைக்கு அவசியமான விடயம் என்றாலும் சந்தைக்கு மிகவும் முக்கியமான தகவல்களும் உள்ளன.
வரிகள் குறித்த விடயங்களையும் அவற்றை நடைமுறைப்படுத்தும் வரை அறிவிப்பதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வரி சீர்திருத்தம் குறித்த விடயங்களை நடைமுறைப்படுத்தும் வரை நாடாளுமன்றத்திற்கு தெரிவிக்க முடியாது. வருமான வரி போன்ற விடயங்களை முன்கூட்டியே அறிவிக்க முடியாது.
நாங்கள் பொதுமக்களுடனோ அல்லது நாடாளுமன்றத்துடனோ பகிர்ந்துகொள்ளக்கூடிய விடயங்களிற்கு எல்லை உள்ளது எனவும் தெரிவித்ள்ளார்.
எனினும் பொதுநிதிக்கான அதிகாரம் உள்ளதால் நாடாளுமன்றத்திடம் இந்த விடயங்களை பகிர்ந்துகொள்ளவேண்டியுள்ளது. நடைமுறைப்படுத்தும்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்போம் பின்னர் நடைமுறைப்படுத்துவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்