நூற்றுக்கு இரண்டு வீதமானவர்கள் நேரடி வரி செலுத்துவதில்லை

கொழும்பு, செப் 8

நாட்டின் சனத்தொலையில் நூற்றுக்கு இரண்டு வீதமானவர்கள் நேரடி வரியினை செலுத்துவதில்லை என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை ஆற்றும் போதே அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

வரி கட்டமைப்பை விரிவுபடுத்துவதன் மூலம் நேரடி வரியினை அதிகரிக்க வேண்டுமெனவும், மறைமுக வரியினை குறைக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது உள்நாட்டு வருமான வரித் திணைக்களத்தில் 68 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட வரி ஆவணங்கள் காணப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், 3 இலட்சத்து 8 ஆயிரத்து 798 தனிநபர் வருமான வரி ஆவணங்கள் மற்றும் 9 ஆயிரத்து 80 பெறுமதி சேர் வரி ஆவணங்களும் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய 3 இலட்சத்து 76 ஆயிரத்து 798 பேர் வருமான வரியினை செலுத்துவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், சர்வதேச வரிக் கொள்கைகளின் அடிப்படையில் குறைந்தபட்சம் 10 விகிதம் நேரடி வரி செலுத்துவோர் இருக்க வேண்டுமெனவும், எமது நாட்டில் இரண்டு வீதமானவர்கள் கூட நேரடி வரியினை செலுத்துவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், மொத்த தேசிய உற்பத்தியின் அடிப்படையில் வரி செலுத்தும் வீதம் குறைவாக காணப்படுவதாகவும், இதனை அதிகரிப்பதற்கான வழிகளை உருவாக்க வேண்டுமெனவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

Leave a Reply