
ஒரு றாத்தல் பாணின் விலையை 200 ரூபாவுக்கு மேல் அதிகரிக்குமாறு சிலர் மிரட்டல் விடுக்கின்றனர் என மாவட்ட வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவரும் முத்தையா வெதுப்பக உரிமையாளருமான கந்தையா குணரத்தினம் தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
யாழ்.மாவட்டத்தில் பெரும்பாலான வெதுப்பக உரிமையாளர்கள் எமது சங்கத்தின் கோரிக்கையை ஏற்று ஒரு இறாத்தல் பாணின் நிர்ணய விலையான 200 ரூபாவுக்கே விற்பனை செய்கின்றனர்.
ஆனால் ஒருசிலர் அவ்வாறு விற்பனை செய்ய முடியாது. விலையை உடன் அதிகரியுங்கள் எனத் தொலைபேசியில் மிரட்டல் விடுக்கின்றனர்.
நான் நேற்று வெதுப்பக தொழிலை ஆரம்பித்தவன் அல்லன். ஒரு மூடை மாவில் தற்போதைய நிலையில் எந்தவொரு வெதுப்பக உரிமையாளருக்கும் நட்டம் ஏற்படாது.
ஆகவே ஒரு சிலரின் தேவைகளுக்காக பாண் விலையை அதிகரித்து ஏழை மக்களின் வயிற்றில் அடிக்க முடியாது.
பாணின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்குரிய மாற்று ஒழுங்கு தொடர்பிலேயே ஆலோசித்து வருகின்றோம்– என்றார்.





