இலங்கை விவகாரத்தில் வல்லாதிக்க நாடுகளின் கைகளுக்குள் சிக்கியுள்ள ஐ.நா- அனந்தி ஆதங்கம்!

முதன் முறையாக வடக்கு,கிழக்கு சார்ந்து ,இன அழிப்புக்கு எதிரான கூட்டமைப்பானது,பட்டையம் ஒன்றினை வெளியிட்டு எதிர்வரும் 12 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் கையளிக்க உள்ள மாநாட்டினை நடாத்த உள்ளோம் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

சமூகம் ஊடகத்திற்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த மாநாட்டில் புலம்பெயர் தேசத்தில் இதய சுத்தியுடன் இன அழிப்புக்காக நீதி வேண்டி பயணிக்கின்ற அத்தனை புலம்பெயர் உறவுகளும் ஒன்று கூடி எங்களுடைய கரங்களை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என அன்பான கோரிக்கையினை விடுத்துக்கொள்கிறோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டது.ஏக பிரதிநிதிகள் என சொல்லிக்கொண்டு ,தமிழ் மக்கள் மரணித்துக்கொண்டிருந்த பொழுது ,22 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் கூட இந்த மக்களை காப்பாற்ற முடியாமல் போனது.

இலங்கை அரசாங்கத்தினை காப்பாற்றுவதற்கு இருக்கிறார்கள் என அவர்களுடைய பயணம் திசை மாறி இருக்கிறது.கடந்த கால தமிழ் தேசிய கூட்டமைப்பின் அறிக்கையினை பார்த்தால்,இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நாங்கள் எதையும் செய்ய மாட்டோம் என பகிரங்கமாக சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அவர்களைத்தான் மக்கள் தமிழ் பிரதிநிதிகளாக தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி இருக்கிறார்கள்.

2009 ஆம் ஆண்டு போரிற்குப் பின்னர் எமது பாதிக்கப்பட்ட தமிழ் தரப்பினர் இன அழிப்புக்கான நீதியினை கேட்டு போராடிக்கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் நீதி கிடைக்காமல் தான் சர்வதேசத்தினை நாடி இருக்கிறோம்.

இதற்கு தமிழ் மக்களை நேசிக்கின்ற புலம்பெயர் அமைப்புக்கள் செயற்திட்டங்களை ஆரம்பத்தில் முன்னெடுத்திருந்த போதிலும் புலம்பெயர் தேசத்தில் வசிக்கின்றவர்கள் தமது தாயகத்திற்கு வர வேண்டிய நோக்கம் உள்ளதனால் இலங்கை அரசினுடைய அல்லது இராணுவத்தினுடைய அச்சுறுத்தல் இல்லாமல் தாங்கள் வந்து போக வேண்டும் என்பதற்காக எங்கள் நீதி கேட்கின்ற பயணத்தில் ஒத்துழைப்பு தர
மறுக்கின்றார்கள்.

ஐ.நா சபையில் பாதிக்கப்பட்ட தரப்பினராக ஒரு நீதியினை பல முறை கேட்டிருந்த போதும், ஐ.நா சபையானது எங்களுக்கு நடந்தது ஒரு இன அழிப்பு என்பதனை இன்னமும் கண்டறியாத நிலை தான் உள்ளது.

ஏனெனில் ஐக்கிய நாடுகள் சபையும் வல்லாதிக்க நாடுகளின் கைக்குள் இயங்குகின்றதாகவே நாங்கள் பார்க்கின்றோம். எங்களுக்கு நடந்த இன அழிப்புக்கு ஐ.நா வும் பங்கு உள்ளது . எனவே ஐ.நா வும் கறை படிந்த கைகளோடு இருக்கின்றது.

தடம் மாறி பயணிக்கின்ற புலம்பெயர் அமைப்புக்களை விட்டு எங்களுடைய தமிழ் மக்களுக்கு நடந்தது ஒரு இன அழிப்பு என்பதனூடாக இன அழிப்புக்கான நியாயமான அரசியல் தீர்வினை எட்டுவதற்குப் பயணிக்கின்ற புலம்பெயர் அமைப்புக்கள் எங்களுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என பணிவாக கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ் தேசியத்தில் பயணிக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்புக்கள் ஒரு நாடுகளிடமும் சென்று பேசவில்லை.இவர்கள் அமெரிக்கா ,பிரித்தானியா போன்ற நாடுகளின் கைக்கூலிகளாக செயற்படுகின்றவர்களாவே பார்க்கின்றோம்.

இந்தியாவிற்கும் நாங்கள் பல கோரிக்கைகளை வைத்த போதும் இதுவரை இந்தியா கண்டுகொள்ளவில்லை.

ஏனெனில் தனது நாடு சார்ந்த,பூகோள நலன் சார்ந்த சிந்தனைக்குள் இந்தியா ,இலங்கை அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்துக்கொண்டிருக்கின்ற படியால் தமிழர்களை பார்க்கின்றதாகத் தெரியவில்லை..என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply