ஜெனிவாவில் நடைபெற்று வரும் 51வது மனித உரிமைகள் அமர்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் மனித உரிமைகள் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி காவிந்த ஜயவர்தன கருத்து வெளியிட்டார்.
போராட்டத்தின் செயற்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறை மற்றும் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உரிமை மீறல்கள் தொடர்பாக மனித உரிமைகள் அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்ததாவது:
“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பொதுமக்களின் பார்வைக்கு திறந்து அதில் உள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரினோம்.
வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் விசாரணை நடத்தப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
அரசாங்கத்தின் 15 வீதம் தேசிய பாதுகாப்புக்காக செலவிடப்படுகிறது. கல்விக்கும், சுகாதாரத்திற்கும் குறைவாகவே செலவிடப்படுகிறது.
மேலும், அமைதியாக போராட்டம் நடத்துபவர்களை ஒடுக்கவும் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் இவ்வாறான சம்பவங்களை கண்டிக்கிறோம். உயர்ஸ்தானிகரின் அர்ப்பணிப்பை நாங்கள் பாராட்டுகிறோம் என்றும் அவர் கூறினார்.
ஜெனிவா மனித உரிமைகள் பேரவை நாட்டின் நிலைமை தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகள் பேரவையின் இவ்வருட அறிக்கையில் நாட்டின் மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜெயவர்தன தெரிவித்தார்.
இந்த ஆண்டு மனித உரிமைகள் அமர்வு இலங்கைக்கு மிக முக்கியமான அமர்வு என்பதால் தானும் தூதுக்குழுவினரும் கலந்துகொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் குழுவொன்று ஜெனிவா மனித உரிமைகள் அமர்வில் இணைந்து கொண்டதுடன், இதற்காக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் சட்டத்தரணி எரந்த வெலியங்கே ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிற செய்திகள்





