
டெஹ்ரான்,செப் 18
ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஹிஜாப் கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஈரானில் சரியாக ஹிஜாப் அணியாததால் மஹ்சா அமினி என்ற 22 வயது இளம்பெண்ணை கைது செய்த காவல் துறையினர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் கோமா நிலைக்கு சென்ற இளம் பெண் உயிரிழந்த சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இச்சம்பவம் நடந்தது.எனினும், இளம்பெண் காவலில் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை போலீசார் மறுத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அமெரிக்க நடிகையும் நாவலாசிரியருமான லியா ரெமினியின் டுவீட் காரணமாக, ஹிஜாப் அணியாத ஈரானியப் பெண்களுக்கு எதிரான வழக்கு மற்றும் அரசு நிர்வகத்தின் வன்முறை ஆகியவை உலகைன் கவனத்தைப் பெற்றன.
அதன்பின், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பெண்கள் பலர் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஹிஜாப் கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக இது கருதப்படுகிறது.



