கலாச்சாரத்திற்கு பெயர்போன வடமாகாணத்தில் குறிப்பாக யாழ் நகர் தற்போது பல்வேறு பட்ட சீரழிவுகள் நிறைந்த ஓர் இடமாக பல்வேறு தரப்பாலும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் கடந்த சிலமாதங்களாக யாழில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருட்பாவனை அதிகரிப்பும் அதனால் நடந்தேறுகின்ற குற்றச் செயல்களுமே பேசுபொருளாகியுள்ளன.
குறிப்பாக தற்போதைய காலப்பரப்பளவில் இனத்தின் எதிர்கால தூண்களாகக் காணப்படும் சிறுவர் மற்றும் இளைஞர் சமுதாயம் போதைப்பொருள் உட்பட கலாச்சார பிறழ்வான செயற்பாடுகளுக்குள் மாண்டு சீரழிவதானது எமது இனத்தின் எதிர்காலத்தையே வியப்புக்குறியாக்குகின்றது.
இப் போதைப்பொருட் பாவனை இன்று நேற்றுள்ள பிரச்சினை அல்ல. குறிப்பாக யுத்த மௌனிப்புக்கு பிற்பட்ட காலத்திலிருந்தே திட்டமிட்டு எம் இனத்தின் எதிர்காலத்தைச் சிதைப்பதற்காக இளைஞர் யுவதிகள் மத்தியில் திணிக்கப்பட்ட ஆயுதமே போதைப்பொருள்.
இன்றளவில் இப் போதைப்பொருட் பாவனைக்கு அதிகளவில் பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறுவர்களே அவற்றின் தாக்கங்களிலிருந்து மீள முடியாத அளவிற்கு அடிமையாகியுள்ளனர். அதிலும் கொரோனா காலப்பகுதிக்கு பிற்பட்ட காலப்பகுதியில் இவற்றிக்கு அடிமையாகும் மாணவர்களின் எண்ணிக்கை பன்மடங்காகப் பல்கிப் பெருகியுள்ளது.
இவ்வாறான நிலையில் குறித்த போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பல்வேறு தரப்புக்களும் தொடர்ச்சியாக குரலெழுப்பும் அதேசமயம் வெறுமனே குரலெழுப்புதலோடு மட்டும் நின்றுவிடாது முழுவீச்சில் போதைப்பொருளினை இல்லாது ஒளிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேவேளை போதைப்பொருள் பிரச்சினையை தீர்ப்பதற்கான புதிய சட்டங்கள் நாட்டில் இயற்றப்பட வேண்டும். குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் சீர்திருத்தப்பள்ளிகள் சிறுவர் சிறைச்சாலைக்கு அனுப்பி புனர்வாழ்வளிக்கப்படுதல் வேண்டும்.
எது எவ்வாறிருப்பினும் தான் தான் திருந்தினால் சமுதாயம் தானாய்த் திருந்தும் என்பதற்கமைய தன்நலத்திலும் சமூகத்தின் நலத்திலும் ஒவ்வொரு பிரஜையும் பொறுப்புடன் செயற்படும் பட்சத்தில் மாற்றத்துக்குட்பட்ட பிரச்சிபைகளற்ற ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கமுடியும் என்பதில் எவவித ஐயமுமில்லை..
பிற செய்திகள்



