
அனியூரிசம் எனப்படும் மூளை வியாதி மூலம் பாதிப்படைந்தவருக்கு வடக்கு – கிழக்கில் முதன் முறையாக, யாழ். போதனா மருத்துவமனையில் சத்திரசிகிச்சையின்றி குருதிக் குழாய் மூலம் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை வெற்றியளித்துள்ளது.
மூளையுடன் தொடர்புடைய நரம்பில், குருதிக் குழாய் பலவீனமடைவதன் மூலம் அது வெடித்து குருதிக் கசிவு ஏற்பட்டு இறக்கும் நிலையை உருவாக்கும் நோயே அனியூரிசம்.
இதுவரை காலமும் சத்திரசிகிச்சை மூலமே தலையின் மேற்பகுதி பிரிக்கப்பட்டு மூளையின் குறித்த குருதிக் குழாயைச் சீர்செய்யும் சிகிச்சை இடம்பெற்றுவந்தது.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 60 வயது பெண் ஒருவர் , மேற்படி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.அவருக்கு வழமையாக மேற்கொள்ளப்படுகின்ற சத்திரசிகிச்சைக்கு மாற்றீடாக ,கால் பகுதி மூலம் குறித்த குருதிக் குழாயின் பலவீனமடைந்த பகுதியை சீர்செய்யும் சிகிச்சை வெற்றிகரமாக யாழ். போதனா மருத்துவமனையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மூன்று தடவைகள் இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், வடக்கு, கிழக்கில் முதன்முறையாக யாழ். போதனா மருத்துவமனையில் இப்போதே இத்தகைய சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ். போதனா மருத்துவமனையின் கதிரியக்கவியல் நிபுணர் அன்ரன் ஜெயில் தலைமையில் கொழும்பில் இருந்து வருகை தந்த நிபுணர் குழுவால் இந்தச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் நோய்த் தொற்று குறைவானதாக இருப்பதோடு, நோயாளி விரைவில் வழமைக்கு திரும்பவும் முடியும்.
யாழ். போதனா மருத்துவமனையில் குறித்த சிகிச்சை வெற்றிபெற்றமைக்கு பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.



