பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல பாதாள உலக செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபட்டு வந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான “பெத்தியகொட சங்க” என்றழைக்கப்படும் லியனகே ஹர்ஷ சதுரங்க பெரேரா மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
அந்த சந்தேக நபர்களுடன், டி-54 ரக துப்பாக்கி, 5 துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், பெத்தியகொட சங்கை நவநகர பிரதேசத்தில் வைத்து கைது செய்து விசாரணைக்குட்படுத்திய போது, குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பரகடுவ பிரதேசத்தில் இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் ஒரே துப்பாக்கியுடன் எஹலியகொட இரத்தினபுரி வீதியில் முச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்த போது கல் புஸ்ஸல்லா தோட்டத்திற்கு முன்பாக கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25 மற்றும் 40 வயதுடையவர்கள். சந்தேகநபர்கள் மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக அஹலியகொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்
விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி பொஜ்ஜா பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் ஆலோசனையின் பேரில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சாகர குலசேகரவின் வழிகாட்டலில், புலனாய்வுப் பிரிவின் பரிசோதகர் கே.எஸ்.பெர்னாண்டோ உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் சந்தேக நபர்களை கைது செய்தனர்.
பிற செய்திகள்



