
யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் திடீர் சுற்றிவளைப்புகள் இனிமேல் மேற்கொள்ளப்படும். இதன்போது சமூகச் சீரழிவு, போதைப்பொருள் பாவனையாளர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாநகர சபையின் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.
யாழ். கோட்டை சூழலிலே அதிகளவான சமூக சீரழிவுச் செயற்பாடுகள் மற்றும் போதைப்பாவனை என்பன இடம்பெறுகின்றன என பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து மாநகரசபை மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தொல்லியல் திணைக்களத்தினருடன் நேற்றுக் காலை யாழ். கோட்டைப் பகுதிக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.
அதன் பின் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
எமது கண்களுக்கு முன்பாக சமூகச் சீரழிவு இடம்பெறுவதை அவதானித்துக்கொண்டிருத்தல் தவறு. உடனடியாக யாழ். கோட்டையைச் சுற்றியுள்ள பற்றைக் காடுகளை துப்புரவு செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. தொல்லியல் திணைக்களத்தினரோடும் கலந்துரையாடி அவர்களது ஒத்துழைப்புடன் இந்தச் செயற்பாடு இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணக் கோட்டை யாழ்ப்பாணத்தினுடைய வரலாற்றுடன் தொடர்புபட்டது. இந்தப் பிராந்தியத்தை தூய்மையாகவும் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டிய கடமை எமக்குரியது. இதனை அபிவிருத்தி செய்வதற்கு தமிழ் மக்கள் நன்கொடையளிக்க முன்வரவேண்டும்.
இங்கு இடம்பெறுகின்ற போதைப்பொருள் வர்த்தகம், சமூகச் சீரழிவுகள் ஆகியவற்றை தடுக்க தொடர்ச்சியாக திடீர் சுற்றிவளைப்பு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன – என்றார்.



