அம்பாறை மக்கள் சுத்தமான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதை ஏற்றுக்கொண்டார்- கெஹேலிய!

நீர் வழங்கல் செயற்திட்டத்தில் இன ரீதியான புறக்கணிப்புக்கள் இடம்பெறுவதாக குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நிதி நெருக்கடி காரணமாகவே நாட்டின் அபிவிருத்தி பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் வாழும் மக்கள் சுத்தமான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளார்கள் என்பதை ஒருபோதும் மறுக்கவில்லை,

மேலும், வெகுவிரைவில் அபிவிருத்தி பணிகளை முழுமைப்படுத்துவோம் என நீர்வழங்கல் அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

பாராளுமன்றில் செவ்வாய்க்கிழமை (04) தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சொறிக்கல்முனை-2,சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மயிலைத்தீவு,ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பனங்காடு,கண்ணகி கிராமம் மற்றும் அலிகம்பை,ஆகிய கிராமங்களில் வாழும் மக்கள் சுத்தமான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

இந்த கிராமங்களில் வாழும் சுமார் 1940 இற்கும் அதிகமான குடும்பங்கள் இவ்வாறு சுத்தமான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளார்கள்.

நாவிதன்வெளி,மத்திய முகாம்,மண்டூர்,கனேஷபுரம்,வக்கிஎல,நாமல் ஓயா,இங்கினியாகல மற்றும் தொட்டம ஆகிய பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட நீர்தாங்கிகள் முழுமைப்படுத்தாமல் இருப்பதால் அதனை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.

நிலக்கீழ் நீர் குழாய்களை அமைப்பதற்கான நடவடிக்கை தற்போது விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டத்தில் நீர்வழங்கல் அபிவிருத்தி செயற்திட்டங்கள் பல்வேறு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் நாட்டின் நிதி நெருக்கடி காரணமாக அபிவிருத்தி பணிகள் தற்போத இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி பணிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் குடி நீர் பிரச்சினை காணப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்,ஆனால் குடி நீர் அபிவிருத்தி செயற்திட்டத்தில் இன ரீதியான வேறுப்பாடு காணப்படுவதாக குறிப்பிட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. அடிப்படை தேவைகள் அனைவருக்கும் பொதுவானது.

இவ்விடயத்தில் வேறுப்பாடு காட்ட முடியாது.அனைவருக்கும் சுத்தமான குடிநீர் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நிதி நெருக்கடி காரணமாகவே சகல அபிவிருத்தி பணிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply