ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத் தொடரில் இலங்கை மீதான புதிய பிரேரணை நிறைவேற்றப்பட்டால் அது அரசுக்குச் சவாலாக அமையாது என்று நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சதெரிவித்தார்.
‘இலங்கை அரசின் பிரநிதிகள் என்ற ரீதியில் ஜெனிவா சென்றிருந்த நாம், நாட்டில் மீண்டுமொரு இருண்ட யுகம் ஏற்பட இடமளிக்கமாட்டோம் என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளோம்.
எமது நிலைப்பாட்டை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்’ என்றும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.
‘ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை குறித்த பிரேரணை நாளை வாக்கெடுப்புக்கு விடப்பட்டால் வாக்களிக்கத் தகுதியுள்ளா 47 நாடுகளில் ஆக ஆறு நாடுகள் மாத்திரமே தமக்கு ஆதரவாக – பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் என்று இலங்கை அரசு அச்சம் கொண்டுள்ளது’ எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் அமைச்சர் விஜயதாஸவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘ஜெனிவாக் கூட்டத் தொடரின் 51ஆவது அமர்வில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உரையாற்றும்போது இலங்கையின் தற்போதைய நிலைமையையும், அரசின் நிலைப்பாட்டையும் விலாவாரியாக எடுத்துரைத்துள்ளார். எனவே, இதைப் புரிந்துகொள்ளும் மனநிலை ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கும் அதில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கும் இருக்கும் என்றே நாம் நம்புகின்றோம்.
இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி ஜெனிவாவில் எத்தனை தீர்மானங்களும் நிறைவேற்றப்படலாம். அதை அரசால் தடுக்க முடியாது. ஆனால், உள்ளகப் பொறிமுறையூடாகவே அரசு எந்தக்காரியத்தையும் முன்னெடுக்கும். சர்வதேசப் பொறிமுறைக்கு இலங்கையில் ஒருபோதும் இடமேயில்லை’ என்றார்.