
உக்ரைன் தலைநகர் கீவ்வில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்ததைத் தொடர்ந்து குறைந்தது மூன்று வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று (திங்கள்கிழமை) காலை உள்ளூர் நேரப்படி சுமார் 07:00 மணிக்கு வெடிப்புகள் நடந்ததாக நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவற்றில் ஒன்று நகர மையத்திற்கு அருகில் வெடித்தது.
எனினும், இந்த தாக்குதல்களின் போது ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேதங்கள் குறித்த தகவல்கள் தெளிவாக இல்லை.
தலைநகரில் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 19பேர் உயிரிழந்தனர்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், கடந்த வாரம் ரஷ்யாவை ஆக்கிரமித்துள்ள கிரிமியாவுடன் இணைக்கும் முக்கிய பாலம் மீது குண்டுவீசி தாக்கியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறினார்.
போரின் போது தலைநகர் கிவ்வின் மையம் நேரடியாக குறிவைக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.
இந்த வார தொடக்கத்தில், உக்ரைன் மீது இன்னும் பெரிய அளவிலான தாக்குதல்கள் நடத்தும் திட்டம் இல்லை எனவும், நாட்டை அழிப்பது தனது நோக்கம் அல்ல என்றும் புடின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



