திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள வாழைத்தோட்டம் கடலில் நீராடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெறுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வாழைத்தோட்டம் கடலில் நான்கு சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்த நிலையில், இதில் இரண்டு சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மூழ்கியுள்ளனர்.
இதன்போது உயிர் தப்பிய மற்றைய இரண்டு சிறுவர்கள் உடனடியாக பிரதேச மக்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, நீரில் மூழ்கிய சிறுவர்களை கடலில் தேடியபோது அவர்கள் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
தரம் 09 இல் கல்வி கற்கும் 14 வயதுடைய யோகேந்திர ராசா லக்சன் வயது , தரம் 06 இல் கல்வி கற்கும் 12 வயதுடைய டினேஸ்காந்த் நிம்ரோசன் ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் சடலங்களும் ஈச்சிலம்பற்று வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், ஈச்சிலம்பற்று பொலிஸாரும், திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் பார்வையிட்டு,பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளது.
தற்போது இரண்டு சிறுவர்களினதும் சடலங்களும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




