தமிழ் முற்போக்கு கூட்டணியானது மின்சூளாக இனி ஒளியை பாய்ச்சும். உங்களை சூழ்ந்துள்ள இருளையும் அகற்றும். மூன்று கட்சிகளும் புரிந்துணர்வுடன் பயணத்தால் எதிர்காலமும் பிரகாசமாக இருக்கும்.
இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நுவரெலியாவில் உள்ள பாடசாலைகளில் கடந்த வருடம் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த சுமார் 300 மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே மேற்க்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
ஒமிக்ரான் என்ற புதிய வைரஸ் பிறழ்வும் உருவாகியுள்ள நிலையில், உலக நாடுகள் பலவும் திண்டாடுகின்றன.
இலங்கையிலும் பல பிரச்சினைகள் தலைவிரித்தாடுகின்றன. குறிப்பாக பொருட்களின் விலைகள் நாளாந்தம் அதிகரிக்கின்றன. இதனால் மக்களின் வாழ்க்கைச்சுமையும் அதிகரித்துள்ளது.
கோதுமா மா விலை உயர்வானது, பெருந்தோட்ட மக்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மக்களுக்கான நிவாரணத் திட்டங்கள் தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
அதேபோல ‘கேஸ்’ பிரச்சினையும் பெரும் பிரச்சினையாக உள்ளது. எந்நேரத்தில் எந்த பாகம் வெடித்து சிறதும் என தெரியவில்லை.
இந்நிலைமைக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களே பொறுப்புக்கூறவேண்டும். விஞ்ஞானப்பூர்வமான நடைமுறைகளை அவர்கள் முறையாக பின்பற்றியிருந்தால் இந்நிலைமையை தவிர்த்திருக்கலாம்.
இது மனித உயிர்களுடன் சம்பந்தப்பட்ட விடயமாகும். எனவே, உறுதியான தீர்வை அரசு முன்வைக்க வேண்டும்.
அதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ‘டோர்ச்’ (மின்சூளம்) சின்னம் எமக்கு வழங்கப்பட்டுள்ளது.
மூன்று ‘பெட்டரிகளும்’ இயங்கு நிலையில் இருந்தால்தான் மின்சூளத்தால் பிரகாசமாக ஒளியை பாய்ச்ச முடியும். அதேபோல கூட்டணியில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகளுக்குமிடையில் சிறந்த புரிந்துணர்வு உள்ளது.
6 வருடங்களாக கூட்டணியாக பயணிக்கின்றோம். இனி மின்சூளம் ஏந்தி வருவோம். மக்களை சூழ்ந்துள்ள இருளை அகற்றி, ஒளியை பாய்ச்சும் விதத்தில் எமது பயணம் தொடரும் – என்றார்.
இந்நிகழ்வில் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம். ராம், மத்திய மாகாண மேலதிக கல்வி பணிப்பாளரும், அட்டன் வலய கல்வி பணிப்பாளருமான அருந்ததி சத்தியேந்திரா, பேராசிரியர் எஸ்.விஜயசந்திரன், அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் அதிபர் ஆர்.ஸ்ரீதர் மற்றும் ஹைலண்ஸ் கல்லூரியின் ஆசிரியர்கள் உட்பட ஏனைய பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




