நாட்டில் டெங்கு அபாயமிக்க வலயங்களாக 10 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தேசிய டெங்கு ஒழிப்பு பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் ஹிமாலி ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 10 ஆயிரத்து 30 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் அதிகளவானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, குருநாகல், இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை ஆகிய 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இதனிடையே, நீர் தேங்கியுள்ள இடங்களில் நுளம்பு குடம்பிகளை அடையாளம் காண்பதற்காக இரண்டு பொலிஸ் மோப்ப நாய்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளன.
டெங்கு ஒழிப்பு தொடர்பில் சுகாதார அதிகாரிகள் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு மோப்ப நாய்களை பயன்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.