ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பாரமெடுக்க எப்போதும் தயாராக உள்ளோம். இந்த நாட்டை ஊழலில்லாமல் ஆட்சி செய்ய ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவினால் முடியும் என முன்னாள் பிரதியமைச்சரும், குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினருமான நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
சம்மாந்துறை பிரதேச விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று ஐக்கிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை தேர்தல் தொகுதியின் பிரதம அமைப்பாளர் எம்.ஏ. ஹஸனலியின் தலைமையில் சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் இன்று மாலை இடம்பெற்றது.
அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், ஐக்கிய தேசிய கட்சியினரால் கடந்த 1994 இற்கு பிறகு இந்த நாட்டில் ஜனாதிபதி ஒருவரை உருவாக்க முடியாமலே போய்விட்டது.
1994இற்கு பின்னர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச போன்றவர்கள் தான் ஜனாதிபதியாக வந்தார்கள்.
அவர்கள் விவசாயிகளுக்குச் சரியான வசதிகளைச் செய்துகொடுக்கவில்லை. ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் எவ்வளவு முயன்றும் எமது நாட்டின் ஜனாதிபதியாக வரமுடியாமல் போனது. பிரதமராகத்தான் இறுதியாக அவரால் வர முடிந்தது.
ஐக்கிய தேசிய கட்சியின் சார்பிலான ஜனாதிபதியாக இருந்த பலரும் விவசாயிகளுக்குச் செய்த நல்ல விடயங்களைப் போன்று அவரால் கூட கடந்த காலங்களில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு ஒழுங்கான தீர்வை முன்வைக்க முடியாமல் போனது.
இனவாதத்தைக் கிளறி ஆட்சியைக் கைப்பற்றிய இந்த அரசாங்கம் கொலை, கொள்ளைகளைச் செய்து வருகிறது. பசளை, கிருமிநாசிகள் என எதுவுமில்லாது விவசாயிகள் கஸ்டப்படுகின்றனர்.
இந்த பிரச்சினைகளுக்குக் காரணம் கோட்டாபய இந்த நாட்டின் ஜனாதிபதியானதே. அவர் முன்வைக்கும் திட்டங்கள் யாவும் மூடத்தனமாக உள்ளது.
நாட்டில் இப்போது எரிவாயு, பால்மா, மரக்கறி, எரிபொருள், டொலர் என எதுவுமில்லை. வரிசையில் நின்று மக்கள் அத்தியாவசிய பொருள் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயம் என்பது நெற்செய்கை மட்டுமல்ல. மரக்கறி முதல் ஏற்றுமதி பயிர்கள் என எல்லாம் அதில் அடங்கும். எதிர்வரும் புதுவருடத்திலிருந்து சோற்றுக்கு மிகப்பெரிய பஞ்சம் ஏற்படும். சீனி முதல் பல்வேறு பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளது.
கடந்த காலங்களில் சீனியில் பாரிய மோசடி நடந்தது. இப்போது விவசாயிகளைக் காட்டி இந்த அரசாங்கம் கடுமையாகக் கொள்ளையடிக்கிறது. இலங்கையில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் ஒற்றுமையாகவே வாழ்கின்றார்கள்.
அவர்களின் ஒற்றுமையைச் சீரழிப்பது அரசியல்வாதிகளே. ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச மக்களை ஒற்றுமையாக வாழச்செய்ய பல்வேறு திட்டங்களை வைத்துள்ளார். விவசாயிகளுக்குத் தேவையானவற்றை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி அரசினால் முடியும்.
அதனால் ஐக்கிய மக்கள் சக்தியைப் பலப்படுத்த எல்லோரும் எங்களின் விவசாய அமைப்புக்களுடனும் கட்சியுடனும் இணைந்து பயணியுங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார்.





