இரண்டு தடவைகள் கயிற்றில் தொங்கிப் பார்த்தேன், மூன்றாவது தடவை தொங்கும் போது காற்று இழுத்து சென்றுவிட்டது, உயிர் தப்புவேன் என்று நினைக்கவே இல்லை என பட்டக்கயிற்றில் 120 அடி உரத்தில் தொங்கியவர் தனது அனுபவத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த முறையே முதன்முதலாக நான் பட்டம் ஏற்ற வந்தேன். என்னுடைய நண்பர்கள் பட்டம் ஏற்ற வருவார்கள். ஆனால், நான் அன்றைய தினமே கடையில் இருந்து லீவு எடுத்து பட்டம் ஏற்ற வந்தேன்.
அன்றைய தினம் 40 நண்பர்களுடன் பட்டம் ஏற்றிக் கொண்டிருந்தோம். நான் முன்னாலும் மற்றவர்கள் பின்னாலும் நின்று பட்டம் ஏற்றிக் கொண்டிருந்தோம்.
பின்னால் நின்ற நண்பர்கள் பட்டக் கயிற்றை விட்ட நிலையில், என்னை பட்டம் சுமார் 120 அடி உயரத்தில் கொண்டு சென்று விட்டது.
என்னைக் காப்பாற்றுங்கள் என்று குலறிய போது, என்னுடன் நின்ற நண்பர்கள் கையை விடாதே உன்னை காப்பாற்றுவோம் என்று சொன்னார்கள்.
மேலே நிற்கும் போது நான் உயிர் தப்ப மாட்டேன் என்பது தான் என்னுடைய கணிப்பாக இருந்ததது. கீழே பார்த்திருந்தால் நான் என்னுடைய கைகளை விட்டிருப்பேன். ஆனால், நான் கீழே பார்க்கவில்லை. கைகள் விறைத்தபடியால் தான் என் கைகளை விட்டேன்.
பட்டம் ஏற்றும் போது கயிற்றில் இரண்டு தடவை தொங்கிப் பார்த்தேன், மூன்றாவது தடவை தொங்கும் போது காற்று கூடியதால் பட்டம் என்னை இழுத்துச் சென்றுவிட்டது.
பட்டத்தின் உயரம் சுமார் 14 அடி, அகலம் 8 அடி இருக்கும். கீழே வந்துவிட்டேன் என்று நினைத்து, சுமார் 25 அடி உயரத்தில் இருந்து பட்டக் கயிற்றில் இருந்து கைவிட்டு விட்டேன்.
பட்டத்தில் இருந்து குதித்த பின் எனக்கு சுயநினைவு இல்லை. என்ன நடந்தது என்றே தெரியாது. வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னரே சுயநினைவு திரும்பியது என்றார்.





