பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்! ரிசாத்

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்க அரசாங்கம் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் இன்று மாலை தெரிவித்தார்.

புத்தளம் தம்பபன்னி அரசினர் முஸ்லிம் வித்தியாலத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று மாலை இடம்பெற்றது.

இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமையால், நேற்று நள்ளிரவு முதல் இலங்கையில் எரிபொருள் விலை எவ்விதமான முன் அறிவிப்புக்களுமின்றி அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதுமாத்திரமன்றி, பால் மா, எரிவாயு என்பன தட்டுப்பாடு நிலவி வருவதுடன், பேக்கரி உற்பத்திகளும், மரக்கறிகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளமை நாட்டு மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று சில வியாபாரிகள் பொருட்களில் விலைகளை தீர்மானிக்கும் ஒரு நிலைமையும் காணப்படுகிறது. இதனால், அன்றாடம் கூலித் தொழில் செய்கின்ற மக்கள் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகிறார்கள்.

எனவே, மக்களின் வாழ்வதரத்தை கவனத்தில் எடுத்து, மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

வடமாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அவர்கள் எனது கவனத்திற்கு கொண்டு வந்தார்கள். அதுபற்றி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் நான் கலந்துரையாடியுள்ளேன்.

எனவே, வடக்கு மீனவர்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என நான் நம்புகிறேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்கிய இந்திய தூதரகம்!

Leave a Reply