யாழ்ப்பாண மாவட்டத்தில் கிராம மட்ட அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகள், மாதத்தில் இரண்டு தடவைகள் மீளாய்வு செய்யப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்ற கிராம மட்ட, அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் பொருளாதாரம் மந்த கதியில் இருந்தாலும்,அபிவிருத்தி என்ற வகையில் நிதி அமைச்சு முனைப்பாக செயற்படுகிறது.
அதிலும் குறிப்பாக கிராம மட்ட அபிவிருத்தியில் அரசு அக்கறை செலுத்தியுள்ளது.ஆகவே இவ்வாறான அபிவிருத்தி செயற்பாடுகளை நாம் சரியாக மேற்கொள்ள வேண்டும்.மாதத்தில் இரண்டு தடவைகள் செயற்பாடுகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்படவேண்டும்.
ஒரு அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் போது ,அதில் வாழ்வாதாரம்,தொழில் முயற்சி,தொழில் வாய்ப்பு இருக்க வேண்டும்.இவற்றை அடிப்படையாக கொண்டே இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப் படுகின்றது .
மக்கள் கேட்பார்கள் ,நாட்டில் விலைவாசி அதிகரித்துள்ளது,நீங்கள் இந்த அபிவிருத்தியை விட்டுவிட்டு டொலரை கவனியுங்கள் என்று.நீங்கள் இதை தெளிவு படுத்த வேண்டும்.பொருளாதாரம் என்பது குறுங்கால பிரச்சினை.ஆனால் அபிவிருத்தி என்பது நீண்டகாலம் எமக்கு தேவைப்படுவது என தெரிவித்துள்ளார்.





