புதிய ஆவணத்தைத் தயாரிக்க தமிழ் பேசும் கட்சிகள் தீர்மானம்!

தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், புதிய ஆவணம் ஒன்றைத் தயாரிப்பது என்று தமிழ் பேசும் கட்சிகள் நேற்றுத் தீர்மானம் எடுத்துள்ளன. அதனை இந்திய பிரதமருக்கு அனுப்புவது தொடர்பான முன்முயற்சியில் தமிழ் பேசும் தரப்புக்களின் தலைவர்களிடையே ஓர் இணக்க நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கலந்துரையாடல், கொழும்பு வெள்ளவத்தை குளோபல் டவர் ஹொட்டலில் நேற்று நடைபெற்றது. அழைக்கப்பட்ட தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள் குறித்த கூட்டத்தில் பங்குபற்றியிருந்தனர்.
புளொட் சார்பில் ஆர்.ராகவன், இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் அமீர் அலி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் நிசாம் காரியப்பர் பங்குபற்றினர்.
கூட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமை வகித்தார்.
ஏற்கனவே, இந்தக்கூட்டத்தில் பங்குபற்றிய பிரதிநிதிகளின் 5 பக்க நகல் ஆவணமொன்றை கூட்டத்தில் ரெலோ கையளித்திருந்தது. அந்த நகல் ஆவணத்தை ஏற்பதற்கு தமிழ் அரசுத் தரப்பு மறுத்தது. அதனால், தமிழ் அரசுத் தரப்பால் ஒரு நகல் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், மற்றைய நகலின் சில விடயங்களை இந்த நகலில் சேர்த்துக் கொள்வது என்று இணக்கம் காணப்பட்டது.

இந்தநிலையில், வயதில் மூத்த தலைவர்கள், கூட்டத்திலிருந்து வெளியேற எஞ்சியோர் ஒன்றிணைந்து தொடர் கலந்தாலோசனைகளில் ஈடுபட்டனர். அதனடிப்படையில் மனோ கணேசன், நிஸாம் காரியப்பர், செல்வம், குருசாமி சுரேந்திரன், ஸ்ரீகாந்தா, மாவை சேனாதிராசா, சுமந்திரன், ஆகியோர் , இரண்டு ஆவணங்களையும் ஒன்றிணைத்து புதிய நகல் வடிவத்தை தயாரிக்கும் பணியில் நேற்று மாலை முழுவதும் ஈடுபட்டனர்.
நேற்று மாலை 6 மணியவில் நகல் வடிவுக்கான பூர்வாங்க இணக்கம் எட்டப்பட்டது.

தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகளாக அடையாளம் காணப்பட்டுள்ள எட்டு விடயங்களையும், அத்தோடு இன்றைய கூட்டத்தில் இணக்கம் காணப்பட்ட அம்சங்களையும் ஒன்றிணைத்து, புதிய நகல் வடிவத்தை தயாரிக்கும் பொறுப்பு சுமந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது.
அது தயாரிக்கப்பட்டதும் அதனை அவர் எல்லா கட்சிகளுக்கும் அனுப்பி வைப்பார். அதனைக் குறித்த கட்சிகள் ஆராய்ந்து சம்மதம் தெரிவித்த பின்னர், அது பகிரங்கப்படுத்தப்படும். அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்து அதில் ஒப்பமிட்டதும், அந்த ஆவணத்தை இந்தியப் பிரதமருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply