உலக சந்தையில், எரிபொருள் விலை குறைவடைந்துள்ள சந்தர்ப்பத்திலேயே, இலங்கையில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், நிதி அமைச்சின் கோரிக்கைக்கு அமையவே, பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
உலக சந்தையில், எரிபொருள் விலை குறைவடைந்துள்ள சந்தர்ப்பத்திலேயே, இலங்கையில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது.
உள்நாட்டில் எரிபொருள் விலையை ரூபாவினால் உயர்த்துவதன் மூலம் எவ்வாறு டொலர் கையிருப்பை அதிகரிக்க முடியும்?
2013ஆம் ஆண்டு உலக சந்தையில், எரிபொருள் விலை பாரியளவில் உயர்வடைந்திருந்தது. எனினும், இலங்கையில் விலை உயர்த்தப்படவில்லை.
ஆனால், தற்போது உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ள நிலையிலேயே, இலங்கையில் விலை உயர்வடைந்துள்ளது.
நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நாட்டிலிருக்கும் போது இதனை அறிவிக்காமல் அவர் நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் அறிவிக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.
நிதி அமைச்சின் கோரிக்கைக்கு அமையவே பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. உள்நாட்டு யுத்தம் தீவிரமடைந்திருந்த போது கூட இவ்வாறான நிலைமை ஏற்படவில்லை.
எரிபொருள் விலை அதிகரிப்பின் பிரதி பலனாக வெதுப்பக உற்பத்திகளின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளன.
முச்சக்கரவண்டி உள்ளிட்ட போக்குவரத்து கட்டணங்களும் அதிகரிக்கப்படும்.
இதேபோன்று மேலும் பலவற்றின் விலைகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் அரசாங்கமும் மக்களும் நட்டமடைந்தாலும் அரசியல்வாதிகளும் வர்த்தகர்களும் இலாபமடைகின்றனர்.
தற்போதைய எரிபொருள் விலை அதிகரிப்பு நியாயமற்றதாகும். இதனைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களை இதனை ஏற்றுக்கொள்ளக் கூடாது. இந்த நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்-என்றார்.





